வீட்டு சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் கலக்கும் தமிழக நண்பர்கள்..!

ஒற்றுமையாக செயல்பட்டால் எந்த பணியையும் எளிதாக முடித்து விடலாம், எதையும் சாதிக்கலாம். இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தை சேர்ந்த நண்பர்களான முருகன் தண்டபானி மற்றும் பிரதாப். இவர்கள் எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் போன்ற தொழில்நுட்பம் சார்நத சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கீக் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர்கள். தொழில்முனேவோர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பெரிய நிறுவனங்களில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு இருவரும் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார்கள். சிஃபி, டாடா டெலிசர்வீசஸ் மற்றும் பிளின்ட்ரான் போன்ற பிரபலமான நிறுவனங்களில் பிராண்ட் உத்தி, தயாரிப்பு மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி பெரிய அனுபவத்தை பெற்றவர் முருகன் தண்டபாணி. 2016ல் தொழில்முனைவோர் முயற்சியில் இறங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்தார். 

அதேசமயம், என்ஜினீயரான பிரதாப் தனது தொழில்முறை பயணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் தொடங்கினார் பின்பு ரெனால்ட்ஸ் நிறுவனத்துக்கான பிரத்யேக உரிமத்தை வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் குழுவில் முக்கிய பொறுப்பில் பணிபுரிந்தார். 2017ல் கார்ப்பரேட் பணியில் இருந்து பிரதாப் விலகினார். முருகனும், பிரதாப்பும் இணைந்து முதலில் ஆன்லைன் வர்த்தக தளமான புளூடீரை (BlueDeer)தொடங்கினர். இந்நிறுவனத்தின் இயக்குனராக பிரதாப் பொறுப்பேற்றார். ஒன்றை நினைத்து தொடங்குவோம் ஆனால் அது வேறொரு பாதைக்கு நம்மை வழிநடத்தும் இதனை நாம் சில விஷயங்களில் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம். 

அதேபோல், அவர்களின் வர்த்தக பயணம் ஒரு ஆன்லைன் வர்த்தக தளமாக தொடங்கியபோதிலும், சந்தை தேவைகள் குறித்த அவர்களின் தீவிர நுண்ணறிவு அவர்களை ஒரு புதிய பாதைக்கு அழைத்து சென்றது. இந்திய சமையலறைகளில் பெரும்பாலும் பாரம்பரிய பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும், அது வீடுகளில் புதிய உலகளாவிய தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உபகரணங்களை ஏற்றுக்கொள்வதை தடுக்கிறது என்பதையும் உணர்ந்தனர். 2015 சர்வதேச ஆய்வின்படி, இந்திய பெண்கள் வாரத்துக்கு 13 மணி நேரம் சமையலறைகளில் செலவிடுகிறார்கள், அதேசமயம் கொரிய பெண்கள் 4 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார்கள். 

2019ல் அவர்கள் புதுமையான தீர்வுகளுடன் சமையலறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் கீக் டெக்னாலஜியை இணைந்து தொடங்கினர். தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வசதியை உயர்த்துதல் மற்றும் ஆரோக்கியமான சமையல் நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கீக் டெக்னாலஜி கவனம் செலுத்துகிறது. கீக் டெக்னாலஜி நிறுவனம் ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்டது. மக்கள் தங்கள் சமையலறையில் எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்துவதற்கு மிகவும் பயந்தனர். விளம்பரங்கள் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஈடுபடுத்தியதன் விளைவாக நுகர்வோர் கீக் டெக்னாலஜிஸ் தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டனர். 

இன்று கீக் நிறுவனம் பல்வேறு மின்சார மற்றும் தொழில்நுட்பத்தால் இயங்கும் சமையலறை மற்றும் மின்சார பிரஷர் குக்கர், ஏர் பிரையர் ஓவன், ரீசார்ஜபிள் பேன், ஸ்மார்ட் லாக்ஸ் மற்றும் வேக்யும் கிளீனர் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வழங்குகிறது. கீக் டெக்னாலஜிஸ் தனது பிராண்ட் வலைத்தளத்தை தவிர்த்து அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களிலிருந்தும் வருமானம் வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் கீக் டெக்னாலஜிஸ் மொத்த வருவாயாக ரூ.35 கோடி ஈட்டியுள்ளது.