2019-ல் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் லூசிஃபர். மோகன்லால் உடன் டொவினோ தாமஸ், மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர், அரசியல் ஆக்ஷன் திரில்லராக வெளியான லூசிஃபர் மலையாள திரையுலகில் வசூலில் புதிய சாதனை படைத்தது. ரூ200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்பதோடு, ஆல் டைம் வசூலில் முதல் மூன்று மலையாளப் படங்களில் ஒன்றாக சேர்ந்தது.
லூசிஃபர் மலையாள திரைப்படத்தின் வெற்றி காரணமாக, அது ‘காட்ஃபாதர்’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான்கான் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். முத்தொகுதியாக திட்டமிடப்பட்டிருந்த லூசிஃபர் வரிசையின் இரண்டாம் பாகம் ‘எல்2: எம்புரான்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. தற்போது எம்புரானின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
இயக்கத்தில் 3வது படம்; லூசிஃபரின் இரண்டாம் பாகம்; ஃப்ர்ஸ்ட் லுக்’ என சுவாரசியமாக இதனை பதிவிட்டிருந்தார் பிரித்விராஜ். எம்புரானில் மோகன்லாலுடன் மஞ்சுவாரியார், டொவினோ தாமஸ் மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆசிர்வாத் நிறுவனத்தின் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் லைகா நிறுவனம் இணைந்துள்ளது.
முதல் பாகத்திலிருந்து வேறுபட்ட கதையோட்டத்தை விளக்கும் வகையில் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. தீப்பிழம்புகள் சூழ்ந்திருக்க முதுகு காட்டி நின்றிருக்கும் மோகன்லால் கையில் மெஷின் கன் உடன் காத்திருக்கிறார். அவருக்கு நேரெதிரே போர்த்தாக்குதலில் ஈடுபடும் ஹெலிகாப்டர் காட்சியளிக்கிறது. லூசிஃபர் திரைப்படத்தின் வெற்றி மற்றும் வசூல் காரணமாக எம்புரான் திரைப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் எம்புரான் வெளியாக உள்ளது.