சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படம் எப்படி இருக்கு? ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்தி சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது அயலான். மேலும் கருணாகரன், யோகிபாபு, பாலா சரவணன், பானுபிரியா என பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அதை முடிப்பதில் படக்குழு பல சிரமங்களை சந்தித்து வந்தது. எனினும் அதைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்து திரைக்கு கொண்டு வந்திருக்கும் படக்குழுவை பாராட்டியே ஆக வேண்டும்.
வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு சிதறிய அதிசக்திவாய்ந்த பொருள் ஒன்று பணத்தாசை பிடித்த பெரிய தொழில் அதிபரிடம் கிடைக்கிறது. அதை வைத்து உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மூலமாக மாற நினைக்கும் வில்லனிடமுள்ள அந்த சக்தி வாய்ந்த பொருளை தேடி பூமிக்கு வருகிறது ஏலியன். அதை மீண்டும் ஏலியன் கொண்டு சென்றதா இல்லையா? அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார்? என்பதே அயலான் திரைப்படத்தின் கதை.
ஏலியன் தொடர்பான கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஏலியன்களை ஹாலிவுட் படங்கள்தான் அறிமுகம் செய்தன எனலாம். ஆனால் தமிழில் அத்தகைய படங்களின் எண்ணிக்கையும், அதற்கான முயற்சியும் ஒப்பீட்டளவில் குறைவு. அதை உருவாக்கும் பொருள் செலவும், அதற்கான முயற்சிகளும் காரணமாக இருக்கலாம். தமிழிலும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடியும் என சொல்லி நீண்ட காத்திருப்புக்குப் பின் அதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறது அயலான் படக்குழு.
நாம் யூகிக்கக்கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாக கொண்டு செல்வது அடங்கியிருக்கிறது இயக்குனரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும், அதன்பின் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம். 6 ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்பு சாயல் படத்தில் தெரிகிறது.
ஆக்சன் ஹீரோவாக மாறிய பிறகு, அவரின் பழைய பாணியிலான நடிப்பை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
ரகுல் பிரீத்தி சிங் நாயகியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவர் இன்னும் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். சில காட்சிகளில் வருகிறார். பின் திடீரென காணாமல் போகிறார். காட்சிகளுக்கு இடையிலான தொடர்ச்சியில் அவரைக் காண முடியவில்லை.
முழுக்கவும் கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி படக்குழு இறங்கியிருப்பதை காண முடிகிறது. அதற்கு தகுந்த உழைப்பை சரியாகக் கொடுத்திருக்கிறது கிராபிக்ஸ் குழு. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களை தக்க வைத்திருக்கிறது படக்குழு. ஏலியனை முகபாவனைகளுடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருக்கின்றனர்.
ரஹ்மானின் இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல். பாடல்களில் ரஹ்மானின் இசை எந்திரனின் சாயலைக் கொண்டிருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ‘டாட்டூ’ எனும் பெயரில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த். பழக்கப்பட்ட குரல் என்றாலும் குழந்தைகளைக் கவரும் ஒன்றாக இருக்கிறது சித்தார்த்தின் குரல். குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான படமாக அயலானை கட்டாயம் பார்த்து ரசிக்கலாம்.