லாபத்தை அள்ளிக்கொடுத்த EV பங்குகள்..!

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி விட்டன.வாகன துறையை பொறுத்தவரை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தான் சிறந்த எதிர்காலம் உள்ளது. எனவே எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் புத்திசாலித்தனமாக முடிவாக இருக்கும். எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வார்டுவிசார்ட் இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி லிமிடெட் பங்கு தனது 52 வார கால குறைந்தபட்ச விலையில் இருந்து 100 சதவீதத்துக்கு மேல் லாபம் அளித்துள்ளது.

வார்டுவிசார்ட் இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 23,926 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் வருவாயாக ரூ.37.87 கோடியும், நிகர லாபமாக ரூ.1.75 கோடியும் ஈட்டியிருந்தது. அதேசமயம் அடுத்த (2023) செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.45.11 கோடியாகவும், நிகர லாபம் ரூ.2.42 கோடியாகவும் அதிகரித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே வார்டுவிசார்ட் இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி லிமிடெட் நிறுவன பங்கின் விலை 52 வார கால புதிய உச்சமாக ரூ.85.00ஐ எட்டியது. 

2023 ஜூலை 13ம் தேதியன்று இப்பங்கின் விலை 52 வார குறைந்த அளவாக ரூ.33.21ஆக சரிந்தது.இருப்பினும் அதன் பிறகு இப்பங்கு 100 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை ரூ.78.64ஆக இருந்தது. தற்போது இப்பங்கு தனது 52 வார புதிய உச்ச விலைக்கு அருகில் உள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் கடந்த புதன்கிழமை தொடங்கிய 10வது வைப்ரண்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டில், வார்டுவிசார்ட் இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் தனது 6 எலக்ட்ரிக் வாகனங்கள் மாடல்களை வெளியிட்டது.அந்த உச்சிமாநாட்டில், ஜாய் இ பைக் என்ற பிராண்டின் கீழ் தனது இரு சக்கர வாகனங்களையும், ஜாய் இ ரிக் என்ற பிராண்டின் கீழ் வர்த்தக வாகனங்களையும் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்க வளர்ச்சி நடவடிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே இந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவன பங்கின் மீது ஒரு கவனம் வைத்தால் நல்லது.