இனி ராகிங் நடந்தால்… கல்லூரி முதல்வரே பொறுப்பு! - யுஜிசி எச்சரிக்கை

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் அதிக ராகிங் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அதற்கு அந்தக் கல்லூரியின் முதல்வரே பொறுப் பேற்று விளக்கம் தர வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ( யுஜிசி ) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின் படி, கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாட்டை தடுப்பதற்கான வழி காட்டுதல்கள், யுஜிசி-யால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு மையம் அமைத்தல், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துதல், வளாகங்களில் விழிப்புணர்வு பதாகை வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதற்கான வழிமுறைகளும் யுஜிசி தளத்தில் ( www.ugc.ac.in ) விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. ராகிங் குறித்த விதிமுறைகளை மீறுவது தண்டனைக் குரிய குற்றமாகும். எனவே, மாணவர்களிடம் சுமூகமான பந்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராகிங் தடுப்பு மையங்களுக்கு சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ராகிங் செயல்களால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் தெரிவிக்க தேசிய அளவில் 18001805522 என்ற இலவச தொலைபேசி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏதேனும் கல்லூரியில் அதிக ராகிங் சம்பவங்கள், அதுகுறித்த வழக்குகள் கண்டறியப்பட்டால், அதற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்க நேரிடும். தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழுவிடம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதனால் ராகிங் அச்சுறுத்தல்களை முழுமையாக கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை உயர் கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.