சாதனா மற்றும் சத்யா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சாதனா மற்றும் சத்யா ஆகிய இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவ்விரு மாணவிகளும் கொரோனா விடுமுறையின்போது ஆசிரியர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் திருக்குறளை பயின்று சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மாணவிகளின் இச்சாதனை முயற்சிக்கு ஆசிரியர் ஆரோக்கியராஜும் பக்கபலமாக இருந்துள்ளார்.

சாதனாவையும், சத்யாவையும் திருக்குறளில் அதிகாரம், முதல் சீர், இறுதி சீர்.. என எதைக் கேட்டாலும் ஒப்பிக்கும் திறமை பெற்றவர்களாக ஆசிரியர் ஆரோக்கிராஜின் பயிற்சி மாற்றியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் ஒப்பித்தவர்கள், தற்போதைய கடுமையான முயற்சி மற்றும் பயிற்சிக்குப் பிறகு 13 நிமிடத்தில் அனைத்து திருக்குறள்களையும் ஒப்பித்து வருகின்றனர். இதனால் உலக சாதனைக்கு தயாராகிவரும் இம்மாணவிகள் இருவரையும் ஊக்குவிக்க வேண்டும் என ஆசிரியர் ஆரோக்கியராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர் ஆரோக்கியராஜ் மற்றும் சாதனை மாணவிகள்

இதுகுறித்து ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் கேட்டதற்கு,”கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட அளவில் இரண்டு மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திருக்குறள் முற்றோதல் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழுடன் கூடிய ஊக்கத்தொகையினையும் பெற உள்ளனர். உலக சாதனை முயற்சியில் ஈடுபடுவதற்காக 1330 திருக்குறள்களையும் மிக விரைவாக கூறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சாதனா 13 நிமிடத்திலும், சத்யா 25 நிமிடத்திலும் அனைத்து திருக்குறள்களையும் ஒப்பிக்கும் திறமையினை பெற்றுள்ளனர்..” என்றார்.

எந்த திருக்குறளை கேட்டாலும், எண் மற்றும் அதிகாரம் சொன்னாலும் அந்த திருக்குறளை சொல்லும் திறன் பெற்றுள்ள அரசு பள்ளி மாணவிகள் இருவரும் உலக சாதனை முயற்சிக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.