அயோத்தி விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் ஹனுமன் போல வேடமணிந்தவர் பங்கேற்றது தொடர்பாக திரைப்பட இயக்குநர் நடிகர் சேரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த பதிவுகளை இயக்குநர் சேரன் எக்ஸ் பக்கத்தில் முழுமையாக நீக்கிவிட்டார். திரைப்படங்களில் பேசப்படாத சமூக சிக்கல்களை பேசுவதால் பேசுபொருளானவர் இயக்குநர் சேரன். பின்னர் தாமே நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இயக்குநர் சேரன் நவீன தொழில்நுட்பத்தை திரை துறையில் சேர்ப்பதற்கு இன்றைய ஓடிடி தளத்துக்கு முன்னோட்டமான நகர்வுகளை மேற்கொண்டவர்.
தற்போது Soniy Live-ல் சேரன் இயக்கிய Journey வெப் சீரிஸ் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சிக்கலான 5 கதா பாத்திரங்களை உருவாக்கி அவர்களை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இயக்குநர் சேரன் தமது எக்ஸ் பக்கத்தில், அயோத்தி விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் ராமர், சீதை, ஹனுமன் பங்கேற்ற செய்தியை பகிர்ந்து அதில் ” If Hanuman is there why took flight ?.. Paranthey vanthirukkalamey moonu pera thpokkittu..” என பதிவிட்டிருந்தார். ஹனுமன் எதற்கு பிளைட்டில் போகனும்? அவரு 3 பேரையும் தூக்கிகிட்டு பறந்தே வந்திருக்கலாமே என்கிற இயக்குநரின் சேரன் இந்த ட்வீட் இப்போது சமூக வலைதளங்களில் ரணகளமாகிவிட்டது. இயக்குநர் சேரனின் இந்த கருத்துக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கடுமையான சொற்களால் விமர்சித்தனர் இந்துத்துவா ஆதரவாளர்கள்.
இதனைத் தொடர்ந்து “Hei… Its fun man… Don’t rake is series… Jolly ya paarunga…” இதை ஜாலியாக பாருங்க.. சீரியசா எடுத்துக்காதீங்க..வேடிக்கைதான் இது எனவும் சேரன் பதிலளித்திருந்தார்.