அப்படி ஒரு பென்னி ஸ்டாக் மூன்றே ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 525 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனம். இந்த மல்டிபேக்கர் பங்கு குறித்து சில தகவல்கள் இதோ. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனம் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
1965ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் முன்பு டால்மியா அயர்ன் அண்ட் ஸ்டீல் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் 2023 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.184.05 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 188 சதவீதம் அதிகமாகும். 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.63.93 கோடி ஈட்டியிருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 10 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,697.55 கோடியிலிருந்து ரூ.1,870.22 கோடியாக உயர்ந்துள்ளது. எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கியுள்ளது. கடந்த ஓராண்டில் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 242 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 525 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. 2021 ஜனவரியில் இப்பங்கின் விலை ரூ.21.5ஆக இருந்தது. இருப்பினும் மூன்றே ஆண்டுகளில் இப்பங்கு விலை ரூ.134ஐ தொட்டு விட்டது.
இதன்படி பார்ததால், 2021 ஜனவரியில் இந்நிறுவன பங்குகளில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் அது இப்போது ரூ.62,500ஆக உயர்ந்திருக்கும். 2023ம் ஆண்டில் இப்பங்கின் விலை 7 மாதங்கள் உயர்ந்தது அதேவேளையில் 5 மாதங்கள் விலை குறைந்தது. சென்ற ஆண்டின் முதல் 3 மாத காலத்தில் இப்பங்கின் விலை 16 சதவீதம் குறைந்தது. ஜூலை மற்றும் டிசம்பரில் முறையே 2 மற்றும் 6 சதவீதம் பங்கின் விலை சரிந்தது. இருப்பினும் ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் இப்பங்கின் விலை ஏற்றம் கண்டது. 2024 ஜனவரியில் இதுவரை இப்பங்கின் விலை 13 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் மற்றும் வருவாய் அதிகரித்து வருவதால் அதன் பங்கு விலை அதிகரித்து வருகிறது. கடந்த 8ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உயர்வான ரூ.134.20ஐ எட்டியது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதால் இபங்கின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலை ரூ.125.80ல் முடிவுற்றது. பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்யும் அதாவது அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு சரியான தேர்வாக இருக்கும் என்றும், ரிஸ்க் தவிர்ப்பு அணுகுமுறையை கடைப்பிடிக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு சரிப்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.