டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்து, 7-வது இடத்துக்கு முன்னேறிய நேதன் லயன்!

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூஸிலாந்தின் வெலிங்டனில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டும் 2-வது இன்னிங்ஸில் 10 விக்கெட்டும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை அவர் எளிதாக்கினார்.

இதன்மூலம் நியூஸிலாந்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், நியூஸிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயன் ஆவார். மேலும் ஒரு சாதனையாக டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த வீரர் பட்டியலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் கோர்ட்னி வால்ஷை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்தை நேதன் லயன்பிடித்துள்ளார்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் நேதன் லயன் 527 விக்கெட்கள் எடுத்துள்ளார். கோர்ட்னி வால்ஷ், 519 விக்கெட்டுகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும் (800 விக்கெட்கள்), 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவும் (708 விக்கெட்கள்), 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் (698 விக்கெட்கள்), 4-வது இடத்தில் இந்திய வீரர் அனில்கும்ப்ளேவும் (619 விக்கெட்கள்) உள்ளனர். 5-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் (604 விக்கெட்கள்), 6-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்கிராத் (563 விக்கெட்கள்) ஆகியோர் இருக்கின்றனர்.