நமக்கு வயதாகி பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்போது நம்முடைய சேமிப்பு பணத்தை வைத்து தான் நமது வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே நல்ல வருமானம் வரும்போது தேவையான முதலீடுகளை செய்து விட்டால் ஓய்வு காலத்திற்கு பிறகு சிறப்பான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழலாம்.
அந்த வகையில் சீனியர் சிட்டிசன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டம் பற்றி தான் இந்த பதிவில் நாம் பேச இருக்கிறோம். அது தபால் நிலைய சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Post Office Senior Citizen Savings Scheme) என்பதுதான். இந்த திட்டம் அரசு ஆதரவை பெற்று வருவது மட்டுமல்லாமல் பிற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அதிக அளவு வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் ஒருவர் 1000 ரூபாய் என்ற குறைந்தபட்ச முதலீட்டில் ஆரம்பிக்கலாம் என்பதே இதன் முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது. தபால் நிலைய சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் என்பது இந்தியாவில் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்கு பாதுகாப்பான ஒரு முதலீடாக கருதப்படுகிறது. இந்த திட்டம் ஒரு நபரின் ரிட்டயர்மெண்ட் காலத்தில் வழக்கமான வருமானத்தை தருவதன் மூலமாக பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது.
தகுதி வரம்பு :
தபால் நிலையத்தின் SCSS திட்டமானது 60 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கான திட்டம் அல்லது அகவைமுதிர் ஓய்வு முறை VRS அல்லது சிறப்பு VRS மூலமாக ஓய்வு பெற்ற 55 வயதிற்கு மேற்பட்ட ஆனால் 60 வயதிற்கு உள்ளாக இருக்கக்கூடிய நபர்களும் இந்த அக்கவுண்டை திறக்கலாம். இது தவிர இந்திய பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் தங்களது 50வது வயதை அடையும்போது இந்த அக்கவுண்ட்டை திறக்கலாம்.
இந்த அக்கவுண்ட்டை ஒருவர் தனியாகவோ அல்லது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆகவும் திறக்கலாம். ஆனால் இதில் இருக்கக்கூடிய ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், ஜாயின்ட் அக்கவுண்டில் இருக்கக்கூடிய முதல் அக்கவுண்ட் ஹோல்டருக்கு மட்டுமே அதில் இருக்கக்கூடிய முழு தொகையும் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு சென்று சீனியர் சிட்டிசன்கள் SCSS அக்கவுண்ட் திறக்கலாம். இந்த அக்கவுண்ட்டை திறப்பதற்கு சீனியர் சிட்டிசன்கள் குறைந்தபட்சமாக 1000 ரூபாயையும், அதிகப்பட்ச டெபாசிட்டாக 30 லட்சம் ரூபாய் வரையும் செலுத்தலாம். இந்த அக்கவுண்டில் ஒருமுறை மட்டுமே ஒருவர் டெபாசிட் செய்ய முடியும். 1000 ரூபாய் மடங்கில் 30 லட்ச ரூபாய்க்கு மிகை ஆகாமல் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த அக்கவுண்டில் இருந்து ஒருவர் பணத்தை பலமுறை வித்ட்ரா செய்ய முடியாது.
ரிட்டன் எவ்வளவு கிடைக்கும்?
தற்போது இந்த திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு நபர் இந்த திட்டத்தில் 30 லட்சம் ரூபாயை முதலீடு செய்யும் பட்சத்தில் அவருக்கு ஒரு ஆண்டுக்கு 2.46 லட்சம் ரூபாய் வட்டியாக கிடைக்கும், அதாவது ஒவ்வொரு மாதமும் 20,000 ரூபாய் கிடைக்கும்.