சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.85 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதேபோல் தமிழ்நாட்டில் சிங்கப்பெருமாள் கோயில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருட்டுறைப்பூண்டி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் 6 சரக்கு கிடங்குகளையும் திறந்து வைத்தார். மேலும் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். லக்னோ – டெஹ்ராடூன், கலபுரகி – பெங்களூரு (சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல்), ராஞ்சி – வாரணாசி, டெல்லி (நிசாமுதின்) – கஜுராஹோ, செகந்திராபாத் – விசாகப்பட்டினம், புது ஜல்பைகுரி – பாட்னா, பாட்னா – லக்னோ, அகமதாபாத் – மும்பை சென்ட்ரல், பூரி – விசாகப்பட்டினம் மற்றும் சென்னை – மசூரு ஆகிய வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை குஜராத்தில் இருந்து பிரதமர் மோடி, கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்னை சென்ட்ரல் – மைசூரு வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 6 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
இதுவரை மொத்தம் 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைத்து வருகின்றன. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.