இன்று மருந்து மாத்திரை இல்லாமல் ஒரு நாளைக் கூட கடத்த முடியாத நிலைக்கு நம்மில் பெரும்பாலானோர் வந்துவிட்டோம். தலைவலி முதல் நாள்பட்ட நோய்கள் வரை, அனைத்திற்கும் மருந்து மாத்திரைகளே நிவாரணம் அளிக்கின்றன. வழக்கமாக மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகளை மருந்தகத்தில் கொடுத்து நமக்கு தேவையான மாத்திரைகளை வாங்கிக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நேரடியாக மருந்தகத்திற்கே சென்று மருந்தின் பெயர்களை கூறி வாங்கிக் கொள்கிறோம்.
ஆனால் நாம் வாங்கும் மருந்து மாத்திரைகளின் அட்டைகளில் இருக்கும் வித்தியாசமான குறியீடுகள், லேபிள்கள், அட்டவணைகள், தகவல்கள் ஆகியவற்றை என்றாவது பார்த்திருக்கிறோமா? இவை ஒவ்வொன்றுக்கும் உள்ள அர்த்தங்கள் உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
சிவப்பு கோடு அல்லது சிவப்பு பெட்டி :
நாம் மாத்திரை வாங்கும் போது, அந்த அட்டையின் மேல் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருக்கும். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? சிவப்பு கோடு போட்டுள்ள மாத்திரைகளை ஒருபோதும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்கவோ, உட்கொள்ளவோ கூடாது. சில மாத்திரை அட்டைகளில் சிவப்பு நிற பெட்டிக்குள் சில தகவல்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதுவும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக் கூடாது.
டோசேஜ் :
மாத்திரையின் அட்டையில் அல்லது மருந்து பாட்டிலில் இதை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற டோசெஜ் அளவு இருப்பதை பார்த்திருப்பீர்கள். உதாரணத்திற்கு இருமல் டானிக்காக இருந்தால், பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வெவ்வேறு அளவு கொடுக்க வேண்டும். எந்தவொரு மருந்து வாங்கினாலும், அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற விவரத்தை அவசியம் பாருங்கள். சில சமயங்களில் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்தாக போய்விடும்.
அலர்ஜி :
சில சமயங்களில் குறிப்பிட்ட மாத்திரைகள் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் என அதன் அட்டைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களுக்கு அதில் குறிப்பிட்டுள்ள அலர்ஜி இருந்தால், மருத்துவரிடம் வேறு மாத்திரை தருமாறு கேளுங்கள். மருந்துகளின் பக்கவிளைவுகள், அலர்ஜிகள், மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ளவது, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றுக்கு நோயாளிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஸ்டோரேஜ் :
பெரும்பாலானோர் இதை கண்டுகொள்வதேயில்லை. இது தவறான பழக்கமாகும். மருந்துகளின் லேபிளில் குறிப்பட்டவாறு நாம் மருந்தை ஸ்டோர் செய்ய வேண்டும். அப்போதுதான் மருந்தின் தன்மை மாறாமல் இருக்கும். சில மருந்துகளை வெயிலில் படாதவாறு வைத்திருக்க வேண்டும் என குறிபிட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் மருந்தின் திறன் குறைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
காலாவதி தேதி :
இதை பார்க்காமல் மருந்துகளை ஒருபோதும் வாங்காதீர்கள். காலாவாதியான மருந்துகளை நோயாளிகள் பயன்படுத்தும் போது, அதன் வீரியம் குறைந்து உங்களின் நோயை குணப்படுத்தும் தன்மையை இழக்கிறது. மேலும் மாத்திரையின் அட்டையில் இந்த மருந்து எப்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். ஒருமுறைக்கு இருமுறை இதை பார்த்துவிட்டு உங்கள் மருந்துகளை வாங்குங்கள்.
துண்டுச்சீட்டு :
நாம் சிரப் வாங்கும் போது அதன் அட்டைப் பெட்டிக்குள் சிறிய துண்டுச் சீட்டு ஒன்று மடித்து வைத்திருப்பதை பார்த்துள்ளீர்களா? பார்த்தாலும் அதை வாசிக்காமல் குப்பையில் போடுவதை தான் இத்தனை காலமாக செய்து வருகிறோம். நாம் வாங்கும் மருந்தின் முழுமையான தகவல்கள், அதன் பக்கவிளைவுகள், எப்போது சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து விவரங்களும் இந்த துண்டுச் சீட்டில்தான் எழுதப்பட்டிருக்கும். நோயாளிகள் ஒருமுறையாவது இதை வாசித்துப் பார்க்க வேண்டும். இதில் ஏதாவது உங்களுக்கு சந்தேகமோ கேள்விகளோ இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.