கெயில் சாதனையை முறியடித்த வில் ஜாக்ஸ்..!

ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ் 50 லிருந்து 100 ரன்கள் அடிப்பதற்கு 10 பந்துகள் மட்டுமே எடுத்து கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக்கான் 58 ரன்கள் எடுத்தார்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ், ஸ்வப்னில் சிங், கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இன்னும் சொல்லப் போனால், பவுண்டரியை விட அதிகளவில் சிக்ஸர்கள் விளாசினர். இதில், வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரி உள்பட 100 ரன்கள் குவித்து தனது முதல் ஐபிஎல் சதம் அடித்து சாதனை படைத்தார்.

அதோடு, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதே போன்று யூசுப் பதான் 37 பந்துகளிலும், டேவிட் மில்லர் 38 பந்திலும், டிராவிஸ் ஹெட் 39 பந்திலும் சதம் விளாசியுள்ளனர். கடைசியாக ஆர்சிபி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 206 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி 44 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலமாக ஆர்சிபி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி பகலில் விளையாடிய 6 போட்டிகளில் இன்றைய போட்டி உள்பட 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இரவில் விளையாடிய 18 போட்டிகளில் 5ல் வெற்றியும் பெற்றுள்ளது. இதைவிட கிறிஸ் கெயில் 50 முதல் 100 ரன்கள் அடிப்பதற்கு 13 பந்துகள் எடுத்துக் கொண்ட நிலையில், அந்த சாதனையை தற்போது வில் ஜாக்ஸ் 10 பந்துகளில் 50 முதல் 100 ரன்கள் அடித்து முறியடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் 50 முதல் 100 ரன்கள் அடிப்பதற்கு 13 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

மேலும், 2ஆவது முறையாக 200 ரன்களை சேஸ் செய்து ஆர்சிபி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த கடந்த 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 204 ரன்கள் சேஸ் செய்தது. தற்போது 2ஆவது முறையாக 201 ரன்கள் சேஸ் செய்துள்ளது. அதற்கு முன்னதாக 192 மற்றும் 187 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.