காதல் திருமணம் செய்து கொண்டு கணவர் சந்தோஷ் பிரதாப்புடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் தமன்னா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் கணவர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாகவும் அண்ணன் சுந்தர் சி.க்கு தகவல் வருகிறது. அங்கு சென்ற பிறகு தான் அமானுஷ்ய சக்தியால் தன் தங்கை கொலை செய்யப்பட்டது சுந்தர் சி.க்கு தெரிய வருகிறது. அந்த அமானுஷ்ய சக்தி தமன்னாவின் மகளையும் கொலை செய்யத் துடிக்கிறது. அந்த சக்தியிடம் இருந்து தமன்னாவின் மகளை காப்பாற்றுகிறாரா சுந்தர் சி. என்பதே அரண்மனை 4 படத்தின் கதை.
முந்தைய அரண்மனை படங்களை போன்றே இதிலும் திகில் காட்சிகளுக்கும், காமெடிக்கும் குறைவில்லாமல் இருக்கிறது. யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரேன், லொள்ளு சபா சேஷு ஆகியோர் காமெடி செய்து சிரிக்க வைத்திருக்கிறார்கள். இத்தனை பேர் இருந்தாலும் தனித்து தெரிகிறார் சேஷு. அவர் கோவை சரளாவை காதலிக்கும் காட்சிகளை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. காமெடியில் யோகி பாபுவை ஓவர்டேக் செய்திருக்கிறார் சேஷு என்றே சொல்ல வேண்டும்.
தமன்னா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். அரண்மனை உரிமையாளரான டெல்லி கணேஷின் பேத்தியாக, டாக்டராக நடித்திருக்கிறார் ராஷி கன்னா. அவர் கதாபாத்திரம் மனதில் நிற்கவில்லை. படத்தில் அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை. கே.எஸ். ரவிக்குமார். ஜெயபிரகாஷ், சந்தோஷ் பிரதாப், சிங்கம்புலி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து கைதட்டல் வாங்கியிருக்கிறார்கள். தமன்னாவின் மகளாக வந்த சிறுமி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
திகில் படங்களில் நடிப்பது கோவை சரளாவுக்கு அல்வா சாப்பிடுவது போன்று ஆகிவிட்டது. அதனால் அரண்மனை 4 படத்தில் ஒன்றிவிட்டார். சுந்தர் சி. இயக்குநரோடு, ஹீரோ பொறுப்பும் ஏற்று சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சாமியாராக வந்த ராமசந்திர ராஜுவின் நடிப்பை யாராலும் மிஸ் பண்ண முடியாது. மனிதர் மிரட்டியிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை படத்திற்கு பலம்.
என்ட் கிரெடிட் போடும் நேரத்தில் அச்சச்சோ பாடல் வர இருக்கையை விட்டு கிளம்பிய அனைவரும் அப்படியே நின்று கண் இமைக்காமல் திரையை பார்த்தார்கள். இந்த சம்மர்ல குடும்பத்துடன் பார்க்கலாம்.