No Rooms in Kodaikanal! Urgent Warning for Tourists Arriving Now

kodaikkanal

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் ஆகியவற்றை கோடை சீசன் முழுவதும் அடைத்து வைக்கப் போவதாக கொடைக்கானல் வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் அதிகம் கொளுத்தி வருவதால் கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த இரண்டு நகரங்களும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த அங்கு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 7-ம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்த பிறகே வர முடியும். அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
கொடைக்கானலுக்கு வாகனங்களில் வர இ – பாஸ் கட்டாயம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும் எனக் கூறப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவே வருவார்கள் என கருதப்படுகிறது .
இதனால் இ-பாஸ் முறைக்கு கொடைக்கானலில் எதிர்ப்பு வலுத்துள்ளது. கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப் போவதாக முடிவு செய்துள்ளனர்.
மேலும் இ- பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவை கோடை சீசன் முழுவதும் மூடப்படும், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்க அறைகள் தர மாட்டோம், உணவு வழங்க மாட்டோம் என ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீசன் நேரத்தில் அரசு மற்றும் வணிகர்களின் இத்தகைய அறிவிப்புக்களால் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் சிக்கல் அதிகமாகிறது.