கோடை காலம் தொடங்கி சில மாதங்களாகி விட்டது. கோடை காலம் என்றாலே வெயில் வாட்டி எடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட வெயிலின் தாக்கம் பல மடங்கு இருக்கிறது.மதிய நேரத்தில் காலணி இல்லாமல் தரையில் நடப்பது என்பது நெருப்பு மேல் நடப்பது போன்றுள்ளது.லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்தினாலும் தாகம் மட்டும் குறைந்தபடிலை.
இப்படி வாட்டி எடுக்கும் வெயிலில் வெளியில் சென்று வர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 110 டிகிரிக்கு மேல் கொளுத்தி எடுக்கும் வெயிலால் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் மக்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
கிராம பகுதி மக்களுக்கே இந்த நிலைமை என்றால் நகர்ப்புற மக்களின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.நகரங்களில் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட வீட்டை குளிர்விக்கும் சாதனங்கள் இல்லையென்றால் வீட்டிற்குள் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.இதன் காரணமாக நகரத்தில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் வீடுகளில் ஏசி, ஏர் கூலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
நாள் முழுவதும் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் மக்களால் எந்நேரமும் ஏசி ஆன் செய்த நிலையிலேயே இருக்கிறது.இதனால் மின்சார தேவை அதிகரித்து மின் கட்டணம் பல மடங்கு உயர்கிறது.
இந்த நிலையில் ஏசியும் பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் மின்கட்டணத்தையும் சேமிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள யோசனைகளை பின்பற்ற வேண்டும். வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கின்ற ஏசியை 24-26 டிகிரி செல்சியஸில் செட் செய்து வைப்பதன் மூலம் 36 சதவீத மின் கட்டணத்தை சேமிக்க முடியும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.