திருவாலித் திருநகரி தல வரலாறு (ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலம்)

ஶ்ரீ :
ஶ்ரீ திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்
ஶ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஶ்ரீமத் வரவரமுநயே நம:

“மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை
அணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்
துணித் தருள வேண்டும் துணிந்து”

தலக்குறிப்பு

தலப்பெயர் :

  • திருவாலி திருநகரி
  • பில்வாரணிய  ஷேத்திரம்
  • லக்ஷ்மீபுரம்
  • ஆலிங்கனபுரம்
  • ஶ்ரீநகரீ

ஆகியவை.

(இந்த சிற்றூர் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 7 கல் தொலைவில் உள்ளது.) எம்பெருமான் பூரண மகரிஷியின் திருமகளான அமுதவல்லி என்ற திருப்பெயருடைய தாயாரை ஹ்லாதினி என்ற புஷ்கரிணியின் தாமரையில் எழுந்தருளியிருந்து ஆலிங்கனம் செய்துகொண்ட இடமானதால் திரு + ஆலி = திருவாலி என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது.

பெருமாள் திருநாமம்

மூலவர் / உத்ஸவர் :

ஶ்ரீ வேதராஜன், கலியாண ரங்கநாதன், வயலாலி மணவாளன், வயலாலி மைந்தன், ஆலிநகராளன் என்பன. இப்பெருமானுக்கு அன்று நடந்த ஈடுபாட்டுடன் பல திருநாமங்களைத் திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ளார்.

திருக்கோலம் :

வீற்றிருந்த திருக்கோலம். திருமங்கை மன்னன் வேண்டுகோளுக்கிணங்க மேற்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை தருகிறார். பெருமாள் சந்நிதிக்குப் பக்கத்தில் தென்பக்கம் “ஏவரிவஞ்சிலையான்” என்ற பெருமாள் ஆஹ்வான முத்திரையுடன் மூலவர் / உத்ஸவர் எழுந்தருளியுள்ளார்கள். இப்பெருமாளைத் தவிரத் தலத்துப் புராதனப் பெருமாள் என்றழைக்கப்படும் ஶ்ரீ யோகநரசிம்மர் கோவிலுக்குப் பின்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ளார்.

அம்பாள் :

அம்ருதவல்லித்தாயார்

பெருமாள் விமானம் :

  • அஷ்டாக்ஷர விமானம்,
  • சம்ஸத விமானம்,
  • யோக நரசிம்மன் விமானத்திற்குப் பெயர் கேஸரீ எனத் தலபுராணம் கூறுகிறது.

தலவகை :

இத்தலம் சோழநாட்டு 40 திருப்பதிகளில் 18 ஆவதுமாகும். இத்தலம் நாரதீய புராணப் புகழ்பெற்ற தவமானதால் பௌராணிகமாகும். பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் ஒன்றாகும். இத்தலம் நான்கு யுகங்களாக விளங்கி வருகிறது. குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் என்ற இரு ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 34வது திவ்விய தேசமுமாகும். இத்தலம் அருகே 3 கல் தொலைவில் உள்ள திருகுறையலூரில் (குறை அல்லாத ஊர்) தான் ஆழ்வார்களில் மிகவும் புகழ்பெற்ற திருமங்கை ஆழ்வார் அவதரித்தார். இத்தலத்தில் எழுந்தருளி இருந்தார். இத்தலமே ஆழ்வாரின் அவதாரத்தலம் என வழக்கில் வந்துவிட்டது. இத்தலத்தில் பெருமாள் நான்கு யுகங்களாக சேவை தருகிறார் என்பது தலபுராணம்.

பூஜை :

ஶ்ரீ வைகானஸ ஆகம முறை.

சம்பிரதாயம் :

தென்கலை சம்பிரதாயம்.

புஷ்கரிணீ :

ஹீலாதினீ, பெருமாள் ஸந்நிதிக்குப் பின்புறம் கிழக்கே உள்ளது. பிற நூல்களில் மற்றும் இலாக்ஷணி புஷ்கரிணீ, அலாத புஷ்கரிணீ என்று 8 விதமான புஷ்கரிணீகள் கூறப்பட்டுள்ளன.

பிரத்யக்ஷம் :

பிரஜாபதிக்கும்,திருமங்கை ஆழ்வாருக்கும் பிரத்யக்ஷம்.

உகந்து எழுந்தருளியிருந்த மகான்கள் :

நாதமுனிகள், இராமாநுசர், ஶ்ரீ மணவாள மாமுனிகள், இத்தலத்தில் ஶ்ரீ மணவாள மாமுனிகள் பல நாட்கள் எழுந்தருளியிருந்து பெரிய திருமொழி அனுபவம் செய்தருளினார் என்பர்.

நித்திய ஆராதனம் :

  • காலைசந்தி
  • உச்சிகாலம்
  • திருஅந்திக்காப்பு (நித்தியானுஸந்தானம்)
  • இராக்காலம்
  • அர்த்தஜாமம்

சுற்றுக்கோவில்கள் :

ஊரைச்சுற்றி சுமார் 2 மைல்கல் வட்டத்தில் திருநாங்கூர் திருப்பதிகள் என்ற 11 திவ்விய தேசங்களாகிய (1) மணிமாடக்கோவில், (2) வைகுந்த விண்ணகரம், (3) அரிமேயவிண்ணகரம், (4) திருத்தேவனார் தொகை, (5) திருவண்புருடோத்தமம், (6) திருச்செம்பொன்செய்கோவில், (7) திருத்தெற்றியம்பலம், (8) திருமணிகூடம், (9) திருக்காவளம்பாடி, (10) திருவெள்ளக்குளம், (11) பார்த்தன்பள்ளி என்ற தலங்கள் உள்ளன. (அருகே திருமங்கை மன்னன் வேடுபறிசெய்து பெருமாள் தாயாரிடமிருந்து திருமந்திரோபதேசம் பெற்ற திருமணங்கொல்லை (6 பர்லாங் தூரத்தில்) என்ற புண்ணியமான தலமும் உள்ளது. மேற்கே காழிச் சீராமவிண்ணகரம் என்ற சீர்காழியில் ஶ்ரீ தாடாளப்பெருமாள் கோவிலும், திருஞானசம்பந்தர் அவதாரத்தலமான சீர்காழியில் ஶ்ரீ சட்டநாதஸ்வாமி கோவிலும் புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன் கோவில் முதலிய சிவஷேத்திரங்களும் மற்றும் புதுத்துறை, மங்கைமடம் ஆகிய இடங்களும் உள்ளன.