உறியடி விஜயகுமார் நடிப்பில் 'எலக்சன்' படம் எப்படி இருக்கு..?

உறியடி விஜயகுமார் நடிப்பில், தமிழ் இயக்கியிருக்கும் “எலெக்ஷன்” திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் எனும் ஊரைச் சேர்ந்தவர் ஹீரோ விஜயகுமார். இவரது அப்பா ஜார்ஜ் மரியன் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தீவிர தொண்டனாக செயல்பட்டு வருவதால் ஊரில் அவர் ஆதரவு அளிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
ஒரு கட்டத்தில் ஜார்ஜ் மரியனின் நபர் சுயேச்சையாக நிற்பதாகவும், தனக்கு ஆதரவு தருமாறும் கேட்கிறார். ஆனால் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெற வைக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஹீரோ நடராசன் (விஜயகுமார்) பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சூழல் உருவாகிறது. சுயேச்சையாக போட்டியிடும் நடராசன் வாழ்க்கையை அரசியல் எப்படி புரட்டிபோட்டது, இறுதியில் அவர் எடுத்த முடிவு என்ன என்பதே மீதிக்கதை.
நடராசன் கதாப்பாத்திரத்திற்கு விஜயகுமார் கணக்கச்சிதமாக பொருந்துகிறார். முதல் காதல் கைவிட்டு போகும் போதும், தன் மாமா பவெல் நவகீதன் முன் என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் நீதான்யா என்று உடைந்து அழுது பேசும்போதும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
கட்சியின் தீவிர தொண்டனாக இருந்து தலைவர் பதவிக்கு போட்டியிட ஆதரவு கேட்கும் ஜார்ஜ் மரியன், அங்கு அவமானத்தை சந்திப்பதும் அதை மனைவியிடம் கூறி கதறுவது நடைமுறையில் உள்ள அரசியலை பிரதிபலிக்கிறது. முதல் பாதி காதல், அரசியல் களம் எனக்கு விறுவிறுப்பாக நகர்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் மெட்ராஸ் படத்தை நினைவுப்படுத்தினாலும் அருமை. தேர்ந்த அரசியல்வாதி கதாபத்திரத்தில் திலீபனும் மிரட்டியிருக்கிறார். பல காட்சிகள் கள அரசியலை காட்டுகின்றன. ட்விஸ்ட் தெரிந்த பின்னர் இப்படி தான் படம் முடியப்போகிறது என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. எனினும் தான் புரிந்துகொண்ட அரசியலை ஹீரோ கூறுவது சிறப்பு.
மொத்தத்தில் அரசியல் விழிப்புணர்வை உரக்க சொல்லியிருக்கிறது இந்த எலெக்ஷன்.