பிரபல நிறுவனங்களின் பிரீமியம் மாடல் கார்களை வாங்க வேண்டும் என்றால் நாம் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும்.
இதற்காக இஎம்ஐ போட வேண்டும், காருக்கான இன்சூரன்ஸ் மற்றும் காருக்கான மெயின்டனன்ஸ் மற்றும் ரீசேல் வேல்யூ என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டுதான் நாம் கார் வாங்கும் முடிவையே எடுக்க முடியும்.இந்த நிலையில் கியா நிறுவனம் இந்தியாவில் ஒரு புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு பெயர் கியா லீஸ் (Kia lease). இந்தியாவில் இனி கியா நிறுவனத்தின் ப்ரீமியம் மாடல் கார்களை நாம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கியா நிறுவன மாடல்களை மற்றும் கியா பிராண்டினை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கியா லீஸ் என்ற திட்டத்தை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கியா நிறுவனம் ORIX Auto Infrastructure Services என்ற நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளது. இதன்படி குத்தகை விடும் பணிகளை இந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் மக்கள் கியாவின் பிரீமியம் மாடல் கார்களை லீசுக்கு எடுத்து பயன்படுத்தலாம்.
இது தொடர்பாக கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்ஷூரன்ஸ், மெயின்டனன்ஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் தங்கள் ரக கார்களின் சிறப்பம்சங்களை பொதுமக்கள் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கியா பிராண்டினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக கூறியுள்ளது.கியா நிறுவனத்தில் தற்போது ஹாட் செல்லிங் மாடல்களாக இருக்கக்கூடிய சொனட்(Sonet), செல்டாஸ் (Seltos) மற்றும் கேரன்ஸ் (Carens) ஆகிய ரக கார்களை எந்த ஒரு டவுன் பேமெண்டும் இல்லாமல் 24 முதல் 60 மாதங்கள் வரை லீசுக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை குத்தகையாக செலுத்த வேண்டும். சொனட் காருக்கான குத்தகை தொகை மாததிற்கு 21,900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களுக்கு 29,000 ரூபாய் வரையிலும் மாதாந்திர குத்தகை தொகை செலுத்த வேண்டும். உலக அளவில் தற்போது கார்களை லீசுக்கு விடுவது என்பது ஒரு டிரெண்டாக மாறி வருகிறது. இந்தியாவிலும் இதனை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம் என கியா நிறுவனத்தின் சிறப்பு விற்பனை அதிகாரியான யங் சிக் சாங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இளம் வாடிக்கையாளர்கள் கியா ரக கார்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதனிடையே ORIX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கார்களை லீசுக்கு எடுப்பது என்பது வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தீர்வாக அமையும் ஏனெனில் அவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கார் மாடல்களை மாற்றிக் கொள்ளலாம் கார் வாங்கும் தொகை, இன்சூரன்ஸ் தொகை போன்ற எந்த கவலையும் வாடிக்கையாளருக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார்.