தருமபுரியில் சவுமியா அன்புமணியும் விருதுநகரில் விஜய பிரபாகரனும் வெல்வார்கள் என யாரோ ஒரு ஜோதிடர் சொன்னதாக எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 லோக்சபா தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி இருந்தது.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. மத்தியில் பாஜகவே ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறதா இல்லை ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் 7-ஆவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் மாலைக்கு மேல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான டிவி சேனல்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தமட்டில் 39 தொகுதிகளிலும் எந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்புகளை நடத்தியது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் 35 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும் என கணித்துள்ளது.
அதில் முக்கியமாக கோவை, தருமபுரி, விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளின் நிலவரத்தை அறிய மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அந்த வகையில் நேற்று தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கே வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டது. அது போல் அந்த தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 3 ஆவது இடத்திற்கு தள்ளப்படுவார் என கணித்துள்ளது.
ஆனால் திமுக, பாஜகவுக்கும் இடையே 1 சதவீதம்தான் வாக்கு சதவீதத்தில் வித்தியாசம் இருப்பதாக கணித்துள்ளது. அது போல் தருமபுரியில் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு 34 சதவீத வாக்குகளும் பாமக வேட்பாளர் சவுமியாவுக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 26 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.
அதாவது திமுகவுக்கும் பாமகவுக்கும் கடும் போட்டி நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது போல் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர். விருதுநகரில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸுக்கு 36 சதவீதம் வாக்குகளும், தேமுதிகவுக்கு 27 சதவீதம் வாக்குகளும் , பாஜகவுக்கு 21 சதவீதம் வாக்குகளும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் வளர்ச்சிக்கு அவர் ஆசிர்வதிப்பார் என கட்சியின் தொண்டர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதிலும் விஜய பிரபாகரனின் வெற்றி குறித்தும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய கருத்துக் கணிப்புகளில் விஜய பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
அது போல் மோடியின் மீடியா கருத்துக் கணிப்புகள் என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் , தனது ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எல்லோரும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள வேளையில் ஒரு வாரம் முன்பு எந்தக்கட்சியையும் சாராத என் நெருங்கிய ஜோதிடர் கணித்துள்ள தமிழ் நாட்டின் கருத்துக் கணிப்பை வெளியிடுகிறேன். இதில் உள்ளபடியே நடந்தால், ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை உள்ளவருக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன் என கூறி ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் தருமபுரியில் சவுமியா அன்புமணியும் விருதுநகரில் விஜய பிரபாகரனும் வெற்றி பெறுவார்கள் என அந்த ஜோதிடர் கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணிப்புகள் மெய்யாகுமா பொய்யாகுமா என்பது ஜூன் 4ஆம் தேதி தெரியவரும்.