மெத்தனாலா? எத்தனாலா? எது ஆபத்து அதிகம்?

கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான மெத்தனால் என்றால் என்ன?

அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது பற்றிய முழுத் தகவல்களை மருத்துவர் ஸ்பூர்த்தி பகிர்ந்து கொள்கிறார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மொத்தம் 193 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மரணங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பல மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனடியாக தமிழ்நாடு அரசும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. சட்டப்பேரவையிலும் நேற்று கள்ளக்குறிச்சி உயிர்ப் பலிகள் குறித்து விவாதம் எழுந்தது. அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்தனர். ஆகவே அவர்கள் அவையிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி என்றாலே கலவர பூமி என்ற கருப்பு பெயரை எடுத்துள்ளது. கடந்த 2022 ஆம் நடந்த ஸ்ரீமதி மரணம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. அதனால் அரசுக்குப் பெரிய தலைவலி ஏற்பட்டது. மொத்தமாக உளவுத்துறை செயலிழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பம் நடந்து ஒரு ஆண்டுக்குள் இப்போது கள்ளச்சாராயம் 55 மனித உயிரைக் குடித்துள்ளது. அதற்குக் காரணம், அதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் என்ற வேதிப் பொருள்தான். அது என்ன மெத்தனால்?

அதுபற்றிய விளக்கத்தை அளிக்கிறார் டாக்டர் ஸ்பூர்த்தி, “அரிசி, பழவகைகள் எனப் பொருட்களைப் போட்டு ஊறப்போட்டு உருவாக்கப்படுவதுதான் ஆல்கஹால். இதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை கூட ஆகலாம். இந்த முறையை மாற்றி மிக விரைவாக ஆல்கஹாலை தயாரிப்பதற்காகத்தான் இந்த மெத்தனாலை பலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒரு கூடுதலான போதை கிடைக்கும்.

குறுக்கு வழியில் சாதாரணத்தைத் தயாரிப்பதற்காக இந்த மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இது மிகமிக உடலுக்கு கேடானது. பெயிண்ட் உற்பத்திக்காக அல்லது துணிகளில் சாயங்களை ஏற்றுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. கூடவே பிளாஸ்டிக், பிசின் தயாரிப்பில் மெத்தனால் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே முறைப்படி அனுமதி பெற்ற இந்தத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே இதை வாங்கி இருப்பு வைக்க முடியும். அல்லது பயன்படுத்த முடியும். அனைவரும் இந்தப் பொருளைச் சந்தையில் வாங்கிவிட முடியாது. 30 மில்லி அளவு கொண்ட மெத்தனாலில் ஒரு குழந்தையைக் கொன்றே விட முடியும். அந்தளவுக்கு விஷத்தன்மைக் கொண்டது இது. 60மில்லி முதல் 24மில்லி வரை அளவு கொண்ட மெத்தனால் ஒரு சராசரி மனிதனின் உயிருக்கு உலைவைத்துவிடும். ஆகவேதான் இந்த மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தைக் குடித்தால், அது உணவு மற்றும் நரம்பு மண்டலங்களை முழுமையாகப் பாதித்துவிடும்.

தொடர்ந்து மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடிக்கும் நபரின் சிறுநீரகம் முழுமையாகப் பழுதடையலாம். கூடவே அவர் டயலிசிஸ் செய்ய வேண்டிய நிலை உண்டாகலாம். இது மட்டுமல்ல, உடலில் உள்ள இதயம் தொடங்கி கண் பார்வை வரை பாதிக்கப்படும்” என்கிறார் இந்த மருத்துவர்.

மெத்தனால் போலவே எத்தனால் என ஒன்று உள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

எத்தனால் என்பது தாவர வகைகளிலிருந்து கிடைக்கிறது. சர்க்கரை ஆலைகளில் கரும்புகளிலிருந்து வரும் கழிவுப் பொருட்களிலிருந்து இதனை எடுக்கிறார்கள். இதைத்தான் சாராய ஆலைகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றன. இதை அரசே தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், எத்தனால் அப்படி அல்ல. அது வேதியியல் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் கலந்த மதுபானங்கள் மூலம் வரும் கேடு குறைவானது. மெத்தனால் மூலம் வரும் விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் பக்கவிளைவுகள் அதிகம்.

எத்தனால் மூலம் ஏற்படும் பாதிப்பை எளிதாகக் குணப்படுத்த முடியும். மெத்தனால் உட்கொண்டவரைக் காப்பாற்றுவது கடினம். எத்தனாலை மதுபானம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்துவது போல பயோ டீசல், உரம் தயாரிப்பது போன்ற இயற்கையான தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மெத்தனால் பெயிண்ட் பொருள் தயாரிப்பு தொடங்கிச் சாய ஆலை வரையும் மருத்து பொருட்கள் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. இதன் வாடையே மிகக் கொடுமையாக இருக்கும்.

இவ்வளவு ஆபத்துகள் இருக்கும் போது ஏன் எத்தனாலை பயன்படுத்தாமல் சாராயம் காய்ச்ச மெத்தனாலை பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி எழும். அதற்கு மிக எளிமையான பதில் என்னவென்றால் எத்தனால் விலை அதிகம். ஆனால், மெத்தனால் விலையோ மிகமிக குறைவு. விலை மலிவான வேதிப்பொருளை வாங்கி விலைமதிப்பற்ற மனித உயிரைப் பறிக்கிறார்கள் இந்தச் சமூக விரோதிகள். அரசு மாவட்டம் தோறும் மெத்தனால் நடமாட்டத்தைக் கண்காணித்தாலும் கள்ளச்சந்தை மூலம் இதன் விற்பனை ரகசியமாக நடந்து வருகிறது.

அந்த ரகசியம் பலரது உயிரைப் பறிக்கும்போது உலகம் அறிந்த ரகசியமாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது.