உங்களுக்கு வெற்றிகள் கிடைக்க... நீங்கள் வழிபட வேண்டிய நாள் இதுதான்...

தெய்வ வழிபாட்டிற்கே உரிய நாட்களாக சில குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நாட்களில் தெய்வீக சக்தி அதிகரித்த காணப்படும். இந்த நாட்கள் உரிய முறையில் நாம் வழிபாடுகளை செய்தால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகளும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அப்படி வெற்றிகளை பெறுவதற்கு தவறாமல் வழிபட வேண்டிய நாள் குறித்தும், அந்த நாளின் சிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் குருவின் பலத்தை அதிகரிக்கக் கூடிய நாளும் இது தான் என சொல்லப்படுகிறது.

வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சியை வேண்டாம் என சொல்பவர்கள் யாரும் இருக்க முடியாது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்க நாம் என்ன தான் முயற்சி செய்தாலும், அதற்கு தெய்வ அருளும் நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளால் எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்க ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முறையில் வழிபடுவது மிக அவசியம் ஆகும்.
புறக்கணிக்கப்படும் அஷ்டமி, நவமி :

அந்த வகையில் ஸ்ரீராம பிரான் அவதரித்த திதியான நவமி திதி வெற்றியை பெற வேண்டி வழிபாடு செய்வதற்கு ஏற்ற திதியாகும். நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட கால கணிப்பு முறையில், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாளாகும். பொதுவாக அஷ்டமி, நவமி தினங்களில் எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை கூறினார்கள்.

மகாவிஷ்ணு தந்த வரம் :

அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராமநவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம். எனவே, நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால், நவமி திதி தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும். பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

வெற்றி தரும் நவமி :

ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும். நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலிக்கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம். நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும், இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்து காரியமும் சுபமாக நடைபெறும். நவமி அம்பிகைக்கு உரிய திதியாகவும் சொல்லப்படுகிறது. இந்த திதியில் அம்பிகையை வழிபட்டால் வாழ்வில் உயர்வு, மகிழ்ச்சி ஆகியவை கிடைத்துக் கொண்டே இருக்கும்.

====

Deepam, Vishnu, Victory, Worship, Spirituality, Ashtami, Navami, தீபம், விஷ்ணு, வெற்றி, வழிபாடு, ஆன்மிகம், அஷ்டமி, நவமி