நமது உறுப்புகளில் ஐம்புலன்களும், புலன்களில் கண்களும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
1. பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளி பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
2. பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
3. இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும்.
4. சந்திர தரிசனம்:-இரவில் சாப்பிட்டு கை, வாயை சுத்தம் செய்தபின்பு ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்த நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திர தரிசனம் செய்தல் மிகவும் நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் கை விரல்களை பலகணி போல கோர்த்துக்கொண்டு அதன் மூலம் சந்திரனை சிறிது நேரம் பார்த்தல் “சந்திர தரிசனம்”ஆகும். இதனால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.
5. இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் -1 கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
6. தான்றிக்காய் தோல் பொடி-500 மிகி-1 கிராம் வீதம், தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.
7. தூதுவளை காய் மற்றும் கீரையை, பாகம் செய்து நெய் கூட்டி உணவோடு உண்ண கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.
8. தலைக்கு வாரம் ஒருமுறை, சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணி தைலம்.. இவற்றில் ஒன்றை தேய்த்து குளிக்க வேண்டும்.
9. பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும் .
10. இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும், அதிகாலை 4-5 மணிக்கு எழும்ப பழக வேண்டும். அவசிய, வேலையிருந்தால் மட்டும் இரவு கண் விழிக்க வேண்டும், தண்ணீர் தினமும் குறைந்தது 2 லிட்டர் குடிக்க வேண்டும்.
======
Eye sighting, Deficiency, psychic medicine, tips, கண்பார்வை, குறைப்பாடு, சித்த மருத்துவம், டிப்ஸ்