ஜெயலலிதாவின் ஆட்சியை தி.மு.கவால் ஒருபோதும் தரமுடியாது- சுற்றுப்பயணத்தில் சசிகலா பேச்சு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி, நேற்று மாலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் வேனில் இருந்தவாறு பேசியதாவது:-

தமிழக மக்களை சந்திப்பது பெருமையாக உள்ளது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர்கள் நாம். ஏழை, எளியவர்கள் நலன்பெறும் வகையில் திட்டங்களை தந்தவர் எம் ஜி ஆர் அவரது வழியில் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி நடத்தினார். ஆனால், தி மு க ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. தற்போது மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளனர். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் ரூ,3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சியை தி மு கவால் ஒருபோதும் தரமுடியாது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது.

தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து தான் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இருந்ததா?. 2026-ம் ஆண்டு அ தி மு கவினர் ஒருங்கிணைந்து ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம். அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.