இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950-ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா ஜனதா ஆட்சிக்கு வந்தபோது மத்திய திட்டக் குழு நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நிதி ஆயோக் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மே 27-ம் தேதி நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் நிதி ஆயோக் குழு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 14-ம் தேதி நிதி ஆயோக்கின் 2023, 24-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலான அம்சங்களில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
மத்தியில் பா ஜனதா தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சியில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.
இது நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டமாகும். புதுடெல்லியில் நடக்க உள்ள இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்திற்கான மத்திய நிலுவைத் தொகைகள், கிராமப்புற வீட்டுவசதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஆகியவை குறித்த பிரச்சினைகளை அவர் எழுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லியில் அவர் தங்கி இருக்கும்போது, அங்குள்ள இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
====
Prime Minister Modi, Niti Aayog meeting, Central Planning Commission, Mamata Banerjee, Chief Minister, M K Stalin, பிரதமர் மோடி, நிதி ஆயோக் கூட்டம், மத்திய திட்டக்குழு, மம்தா பானர்ஜி, முதலமைச்சர், மு க ஸ்டாலின்