பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: விஷ்மி குணரத்னே ஆட்டநாயகி விருது

9-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 2-வது நாளான நேற்று இரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியன் வங்காளதேசத்துடன் மோதியது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி, இலங்கை வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ரன்னுக்குள் (5.4 ஓவரில்) 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சரிவில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. 20 ஓவர்களில் வங்காளதேச அணி 8 விக்கெட்டுக்கு 111 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 48 ரன்னும், ஷோர்னா அக்தர் 25 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இலங்கை அணி தரப்பில் உதேஷிகா பிரபோத்ஹனி, இனோஷி பிரியதர்ஷினி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விஷ்மி குணரத்னே 51 ரன்னும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். அரைசதம் அடித்த இலங்கை தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே ஆட்டநாயகி விருது பெற்றார்.

====

Women’s Asia Cup Cricket, Sri Lanka Team, Bangladesh Team, Vishmi Gunaratne, Player of the Match Award, பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட், இலங்கை அணி, வங்காளதேச அணி, விஷ்மி குணரத்னே, ஆட்டநாயகி விருது