பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024... சிறப்பம்சங்கள்...

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நதியில் நடைபெறுகிறது. அணிவகுப்பில் தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் செல்கின்றனர். இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திரு விழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடை பெறும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் திருவிழாவில் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் இருந்து 117 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் ஷெஃப் டி மிஷனாக ககன் நரங் உள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை சுமார் ரூ.68 ஆயிரம் கோடி செலவில் பிரான்ஸ் நடத்துகிறது. போட்டிகள் பாரிஸ் உள்ளிட்ட பிரான்ஸில் உள்ள 16 நகரங்களில் நடத்தப்பட உள்ளன. மேலும் துணை நகரமான பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள தஹிதியிலும் போட்டி நடைபெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் தொடங்குகிறது. வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் தொடக்க விழா, மைதான அரங்கிற்குள் இல்லாமல் நதியில் நடத்தப்பட உள்ளது. பாரிஸ் நகரின் இதயமாக கருதப்படும் சீன் நதியில் ஒலிம்பிக் விளையாட்டின் அணிவகுப்பு பிரம்மாண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 100 படகுகளில் சீன் நதியில் பயணிப்பார்கள். இந்த மிதக்கும் அணிவகுப்பு ஜார்டின் டெஸ்பிளான்ட்ஸுக்கு அருகிலுள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்திலிருந்து புறப்பட்டு ட்ரோகாடெரோவில் முடிவடையும். பின்னர் அங்கு மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடக்க விழா நிகழ்ச்சியை 3 மணி நேரத்திற்கும் மேல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு நாடக இயக்குநரும் நடிகருமான தாமஸ் ஜோலி, பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியின் கலை இயக்குநராக உள்ளார்.

தொடக்க விழா அணி வகுப்பில் தேசியக் கொடியை 5 -வது முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் செல்கின்றனர். இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறையாகும்.

2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கத்துடன் இந்தியா 7 பதக்கங்கள் வென்றிருந்தது. இதுவே ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பதிப்பில் இந்தியா கைப்பற்றிய அதிக பதக்கங்கள் ஆகும். இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 16 விளையாட்டுகளில் 69 பதக்கப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 112 பேர் பங்கேற்கின்றனர். 5 வீரர்கள் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தடகளத்தில் 29 பேர், துப்பாக்கி சுடுதலில் 21 பேர், ஹாக்கி அணியில் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 72 பேர் முதன் முறையாக ஒலிம்பிக்கில் விளையாடுகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு பணியில் 45 ஆயிரம் போலீஸார், 10 ஆயிரம் ராணுவ வீரர்கள், 20 ஆயிரம் தனியார் பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பமும் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. முதன்முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மல்யுத்த விளையாட்டை தவிர மற்ற அனைத்து விளையாட்டிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இம்முறை வெளிநாடுகளில் சிறந்த பயிற்சிகளை பெற்றுள்ளனர். நீரஜ் சோப்ரா மீண்டும் ஒரு முறை தங்கப் பதக்கத்தை வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று குத்துச்சண்டையில் லோவ்லினா போர்கோஹெய்ன், பளுதூக்குதலில் மீராபாய் சானு, பாட்மிண்டனில் பி.வி.சிந்து ஆகியோருடன் ஆடவர் ஹாக்கி அணியும் மீண்டும் பதக்கம் வெல்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

இவர்களுடன் குத்துச்சண்டையில் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிகத் ஜரீன், மல்யுத்தத்தில் ஜூனியர் உலக சாம்பின் பட்டம் வென்றுள்ள அன்டிம் பங்கல், ரீத்திகா ஹூடா, வினேஷ் போகத், அமன் ஷெராவத், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்கும் ஜோதி யார்ராஜி, ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் ஜெனா, டேபிள் டென்னிஸ் சரத் கமலை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி, வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ், பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா பகத், துப்பாக்கி சுடுதலில் சிப்ட் கவுர் சம்ரா, கோல்ஃப் விளையாட்டில் அதிதி அசோக், 4X400 தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணி, பாட்மிண்டனில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஆகியோரும் பதக்கம் வெல்லக்கூடிய போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். தொடக்க விழா மற்றும் போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரலையாக காணலாம்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்

தடகள வீராங்கனையான பாருல் சவுத்ரி 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸிலும் பங்கேற்கிறார். அதேவேளையில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனுபாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் கலந்து கொள்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒட்டுமொத்த இந்திய அணியில் இவர்கள் இருவர் மட்டுமே தனிநபர் விளையாட்டில் இரு போட்டிகளில் விளையாடுகின்றனர்.
இந்திய மல்யுத்த அணியில் இடம் பெற்றுள்ள 6 பேரில் அமன் ஷெராவத் மட்டுமே ஆடவராக உள்ளார். மற்ற 5 பேரும் வீராங்கனைகள்.
14 வயதான திநிதி தேசிங்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் இந்தியர் ஆவார். இதன் மூலம் சக நீச்சல் வீராங்கனை ஆர்த்தி சஹாவுக்குப் (1952 ஒலிம்பிக்கில் 11 வயதில் பங்கேற்றார்) பிறகு ஒலிம்பிக் வரலாற்றில் போட்டியிடும் இரண்டாவது இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் திநிதி.
ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 35 பதக்கங்கள் வென்றுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிக வயதுள்ளவர்களாக சரத் கமல், ரோகன் போபண்ணா உள்ளனர். இதில் 42 வயதான சரத் கமல் டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் விளையாடுகிறார். 43 வயதான போபண்ணா, ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ராம் பாலாஜியுடன் களமிறங்குகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 47 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா கடைசியாக வென்ற 15 பதக்கங்களில் ஏழு பதக்கங்களை வீராங்கனைகளே கைப்பற்றியிருந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சிந்து, லோவ்லினா போர் கோஹெய்ன், மீராபாய் சானு, இந்திய ஆடவர் ஹாக்கி அணி மீண்டும் களமிறங்குகிறது.
5,084 பதக்கங்கள்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பதக்கத்திலும் பிரான்ஸின் பாரம்பரிய சின்னமான ஈபிள் கோபுரத்தின் துகள்கள் 18 கிராம் இணைக்கப்பட்டுள்ளது. தங்கப் பதக்கத்தின் எடை 529 கிராமும், வெள்ளிப் பதக்கத்தின் எடை 525 கிராமும், வெண்கலப் பதக்கத்தின் எடை 455 கிராமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் போட்டிகள்.. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று எந்தவித போட்டிகளும் நடைபெறாது. நாளை (27-ம் தேதி) முதல் பெரும்பாலான போட்டிகள் நடைபெறுகின்றன. 

இந்திய வீரர், வீராங்கனைகள் நாளை கலந்து கொள்ளும் போட்டிகளின் விவரம்:

பாட்மிண்டன்: ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்சயா சென், மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் பி.வி.சிந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஆகியோர் தங்களது முதல் ஆட்டங்களில் விளையாட உள்ளனர். போட்டிகள் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
படகு வலித்தல்: ஆடவருக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட் பிரிவில் பால்ராஜ் பன்வார் பங்கேற்பு. போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் தகுதி சுற்றில் சந்தீப் சிங், அர்ஜூன் பாபுதா, இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிந்தால் பங்கேற்பு. போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவருக்கான தகுதி சுற்றில் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா பங்கேற்பு. பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பதக்க சுற்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுமில் நாகல், இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ராம் பாலாஜி ஜோடி பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறுகிறது.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி சுற்றில் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்பு. போட்டி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
டேபிள் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத்கமல், ஹர்மீத் தேசாய் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா, ஜா அகுலா பங்கேற்பு. மாலை 6:30 போட்டி தொடங்கும்.
குத்துச்சண்டை: மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் பிரீத்தி பவார் பங்கேற்பு. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ஹாக்கி: ஆடவர் ஹாக்கியில் இந்தியா – நியூஸிலாந்து மோதல். இரவு 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.