ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்... வழிபாட்டு முறைகளும்...

ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவை தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படும்.

சிவன், பார்வதியின் அருளால் உருவானவர் முருகப்பெருமான் என கூறப்படுகிறது. குழந்தையிலிருந்தே இவர் 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். இந்த 6 பெண்களைக் கௌரவிக்கும் விதமாக கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு ஜூலை 29 தேதி அதாவது திங்கள் கிழமை வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாகவே தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து, பூஜை வழிபாட்டுகளுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆடி கிருத்திகை நாளில், சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராடி தங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும்.

இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜை அறை அல்லது முருகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னதாக விரதத்தைத் தொடங்கவும். இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடக்கூடாது. உடல் நலம் பாதிப்புக்குள்ளவர்களாக இருந்தால் கொஞ்சமாக பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்துவிட்டு விரதத்தை சைவ உணவுகளோடு முடித்துக் கொள்ளலாம். ஒருவேளை அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்பவர்களாக இருந்தால், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி விரதத்தை முடிக்கவும்.

இவ்வாறு ஆடி கிருத்திகை விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வழிபாட்டு சடங்குகளில் பங்கேற்பதன் மூலமும் பக்தர்கள் முருகனின் மீதான நம்பிக்கையையும், பக்தியையும் உறுதிப்படுத்திக் கொள்வதோடு, வளமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான ஆசியைப் பெறுவார்கள்.