ஆடி பெருக்கு: சிறப்பும்... விஷேசமும்...

ஆடி மாதம் வந்தாலே எந்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. செய்யவும் கூடாது என்பார்கள். வெறும் வழிபாட்டிற்கு மட்டுமே உகந்த நாளாகவும் இந்த ஆடி மாதம் பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆடி மாதத்தில் ஒரு நாளில் மட்டும் என்ன செய்தாலும் செழிப்பாக இருக்கும் மற்றும் எதை செய்தாலும் பெருகும் என்ற தனிச் சிறப்புகளைக் கொண்டு ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு.

ஆம் தொட்ட காரியம் அனைத்தையும் பெருகி வளமும், நலமும் பெற வேண்டும் என்றால் இந்த ஆடிப் பெருக்கில் தாராளமாக எதை வேண்டுமானாலும் செய்ய ஆரம்பிக்கலாம். அடி பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப ஆடி 18 ல் விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட ஆரம்பிப்பது முதல் தாலிக்கயிறு பிரித்து அணிவது, புதிய தொழில்களைத் தொடங்குவது, தங்கம் வாங்குவது என பல சுப காரியங்களை மேற்கொள்வார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான இந்த ஆடிப்பெருக்கு நாளில் மறக்காமல் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகள் உள்ளது? இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

ஆடிப்பெருக்கில் எந்த வேலையையும் தயக்கம் இன்றி செய்யலாம். அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த நாளாக நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து வருகிறது. ஆடி 18 ல் தங்க நகைகள், ஆடைகள் என உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். ஒருவேளை பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் இருந்தால் தங்கம் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு மற்றும் மஞ்சள் வாங்கி வைக்க வேண்டும். சுப மங்களத்தில் அடையாளங்களில் உப்புக்கும், மஞ்சளுக்கும் தனி இடம் உள்ளது. எனவே இதை வாங்கி வைத்தாலே போதும் ஆண்டு முழுவதும் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் அமையும் என்பது ஐதீகம்.

ஆடிப்பெருக்கு நாளில் நமக்கு வாழ்நாள் முழுவதும் உணவைத் தரக்கூடிய அன்னை காவிரி தாயைப் போற்றும் விதமான காவிரி ஆற்றங்கரையில் வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். காவிரியில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் பகுதியில் எந்த நதிகள் உள்ளதோ? அங்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்ளலாம். ஒருவேளை நதிகளுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொள்ள முடியாத சூழல் அமையவில்லையென்றாலும் வீட்டு பூஜை அறைகளில் அல்லது வீட்டிற்கு அருகில் கிணறு இருந்தால் அங்கு வைத்து பூஜைகள் செய்யலாம்.

ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுடன் மஞ்சள் கலந்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிதளவு பூக்களைப் போட்டு பூஜை அறையில் வைத்து வழிபடவும். பழங்கள், காப்பரிசி வைத்து வணங்கவும். தற்போது நாவல் பழங்கள் அதிகம் கிடைக்கிறது என்பதால் இந்த பழங்கள் மற்றும் பிற பழங்களை வைத்தும் பூஜைகள் செய்யும் போது வீட்டில் செல்வம் பெருகும். ஆடிப்பெருக்கு தினத்தில் வீட்டில் உப்பு, புளி, பருப்பு, மிளகாய் வத்தல், எண்ணெய், மஞ்சள் போன்றவற்றைக் கட்டாயம் வாங்கி வைக்க வேண்டும்.

ஆடிப்பெருக்கில் அனைவரும் தாலிக்கயிறு மாற்ற வேண்டும் அவசியமில்லை. கயிறு சரியில்லை, செயினில் தாலிப் பெருக்கி போடப்போகிறோம் என்ற நினைப்பில் உள்ளவர்கள் தாலிக்கயிறு மாற்றலாம். திருமணம் ஆகி ஒரு மாதம் காலம் முடியவில்லையென்றாலும் புதுமண தம்பதிகள் இந்த நாளில் தாலிப்பெருக்கி அணிவது விசேசமானது. கணவர் இருந்தால் கணவரை மாற்றச் சொல்லவும். ஒருவேளை அவர்கள் வெளியில் சென்றிருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் தாலிப் பெருக்கிக் கொள்ளலாம்.