செல்போன் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதைப் போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
‘‘தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருகிறது. மேலும் காதில் இருந்து வெளிவர வேண்டிய மெழுகு போன்ற அழுக்கு வெளிவருவது நின்று விடுகிறது. இது காதில் வலியை ஏற்படுத்துவதோடு, அழுக்கை வெளியேற்றும் இயற்கையான திறனையும் இழக்க வைக்கிறது. காதுக்குள் உண்டாகிற இரைச்சல் பிரச்னையால் செவிப்பறை பாதிக்கப்படும்.
இது காது கேளாமை பிரச்னையை உண்டுபண்ணும். முன்பெல்லாம் வயது மூப்பு காரணமாக ஏற்படுகிற காது பிரச்னைகள் தற்போது இளைய சமுதாயத்திடம் இந்த ஹெட்போன் பயன்படுத்துவதால் வருகிறது. தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்தும்போது காதில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு Sensory neural hearing loss என்கிற காது கேளாமை ஏற்படலாம். காது நரம்புகள் பாதிக்கப்படுவதால் மூளையும் பாதிக்கப்பட்டு தூக்கமின்மை பிரச்னை வருகிறது.
இயற்கையில் நம் காதுகள் தாங்கும் ஒலியை விட அதிகமான அதிர்வினால் செவி மடல் பாதிப்படையச் செய்கிறது. ஹெட்போன்களை பொறுத்தளவு சாதாரண ஹெட்போன்களில் இருந்து விலை உயர்ந்த ஹெட்போன்களும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. இதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்கு மேல் ஹெட்போன் பயன்படுத்துவது நல்லதல்ல. மிகவும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் ஹெட்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். அதேபோல ஹெட்போன் பயன்படுத்தும்போது இடை இடையே நேர இடைவெளி விட வேண்டும். ஹெட்போன் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதவர்கள் தேவையைப் பொறுத்து ஈ.என்.டி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. பெரும்பாலும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே ஹெட்போன்களை பயன்படுத்துங்கள். தொடர்ந்து பாடல்கள் கேட்கும் பழக்கமுடையவர்கள் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பதை தவிர்த்துவிட்டு ஸ்பீக்கர்களின் மூலம் நேரடியாகக் கேளுங்கள். ஏனெனில், உடலில் முக்கியமான உறுப்பு காது என்பதால் கவனம் இருக்கட்டும்.