வயநாடு நிலசரிவு: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்- பிரதமர் மோடி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சிரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் மலைக் கிராமங்கள் உருக்குலைந்து போயின.

இதில் மண்ணில் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இதவரை 418 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த பேரழிவில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. 131 பேரை காணவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் கடந்த 1-ம் தேதி நேரில் பார்வை யிட்டனர். அதோடு பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிகள் குழு நிலச்சரிவு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 10.53 மணிக்கு, கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் மத்திய மந்திரி சுரேஷ் கோபி வந்திருந்தார். அங்கு பிரதமர் மோடியை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து காலை 11.20 மணிக்கு பிரதமர் மோடி வயநாடு புறப்பட்டார். அவருடன் கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

மேலும் 2 ஹெலிகாப்டர்களில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள், மாநில மந்திரிகள் பயணம் செய்தனர்.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட்டார். முதலில் நிலச்சரிவு ஏற்பட்ட புஞ்சிரிமட்டம், இருவழிஞ்சி ஆறு பாய்ந்த பகுதி, சூரல்மலை, முண்டக்கை பகுதிகளை அவருக்கு அதிகாரிகள் விளக்கினர்.

பின்னர் கல்பெட்டா எஸ்.கே.எம்.ஜே. பள்ளிக்கூட மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் பிரதமர் மோடி, மேப்பாடிக்கு புறப்பட்டார்.

கல்பெட்டாவில் இருந்து மேப்பாடி வரை முக்கிய இடங்களில் பொதுமக்கள் சாலையோரம் சோகமே உருவாக திரண்டு நின்றனர்.

அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு, பிரதமர் மோடி காரில் சென்றார். மதியம் 12 45 மணிக்கு மேப்பாடியை வந்தடைந்தார்.

அங்கு நிலச்சரிவில் பலியானோரின் உருவப் படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் மேப்பாடி புனித ஜோசப் பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிலச்சரிவில் சிக்கி குடும்பம், உறவினர்களை இழந்த 5 பேரிடம் பிரதமர் நடந்த சம்பவம் குறித்து கேட்டார். அப்போது அவர்கள் நிலச்சரிவின் கோரத்தாண்டவத்தையும், உறவினர்களை இழந்து நிற்பதாகவும் கண்ணீர் மல்க பிரதமரிடம் எடுத்துக் கூறினர்.

மேலும் சிலர் பேச முடியாமல் கதறி அழுதனர். இதை கண்ட பிரதமர் மோடி, அவர்களது தோள் மற்றும் தலை மீது கை வைத்து ஆறுதல் கூறி அவர்களை தேற்றினார். அப்போது அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

பின்னர் அங்கிருந்து மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றார், பிரதமர் மோடி. அங்கு நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட அருண், முதுகு எலும்புகளில் காயம் ஏற்பட்டு அசைய முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் அணில், 8 வயது சிறுமி அவந்திகா, ஒடிசாவில் இருந்து சுற்றுலா வந்து கணவரை இழந்த டாக்டர் சுருமதி மகாபத்ரா ஆகிய 4 பேரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர்களது உடல் நலம் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.


அதன் பின்னர் கல்பெட்டா வில் உள்ள வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி மற்றும் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்கள், உயிரிழப்புகள், சேத மதிப்பு குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர்.

மேலும் நிவாரண பணிகள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மறுவாழ்வு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு சாதாரணமானது அல்ல. அசாதாரணமானது. பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்பு குழுக்கள், மருத்துவ குழுக்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்களின் கனவு தகர்ந்துள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளா மட்டுமல்ல, மத்திய அரசும், நாடும் துணை நிற்கிறது. கேரளாவுடன் மத்திய அரசு துணை நின்று, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மறுவாழ்வுக்கு பணம் ஒரு தடையாக இருக்காது.

சூரல்மலை பகுதியில் பெய்லி பாலம் அமைத்த ராணுவத்தின் சேவை அளப்பரியது. வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன். அப்போது அவர்களது மன குமுறல்களை அறிந்து கொண்டேன். அவர்களது மறுவாழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை பேரழிவை தடுக்க முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு.

நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக முதல்-மந்திரி தெரிவித்தார். அந்த அறிக்கை கிடைத்த பின்னர், அனைத்து உதவிகளும் தடையின்றி செய்யப்படும். மாநில அரசுடன் இணைந்து செய்ய வேண்டிய மறுவாழ்வு திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

1979-ம் ஆண்டு குஜராத்தில் மோர்பி அணை உடைந்த விழுந்து ஏற்பட்ட பேரழிவை, அணை இடிந்த இடத்தில் தன்னார்வலராக பணிபுரிந்த போது நான் நேரடியாக பார்த்தேன். இதன் மூலம் பேரழிவின் தீவிரத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் அறிக்கை கிடைத்த பின்னர் உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, பள்ளி கட்டிடம், குழந்தைகளின் எதிர்காலம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன். வயநாட்டுக்கு புத்துயிர் அளிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி உள்ளது. தொடர்ந்து அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.