1960களில் நடப்பது போன்ற கதை. வள்ளுவன்பேட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி (கீர்த்தி சுரேஷ்).வங்கியில் வேலை செய்து வரும் கயல்விழி மாணவியாக இருந்தபோதே இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர். மேலும் இந்தி பிரச்சார் சபையை அமைப்பதை தடுத்தவரும் கயல்விழி தான். கா. பாண்டியன் என்கிற பெயரில் எழுதி வருகிறார் கயல்விழி. அவரின் எழுத்துக்கு ரசிகராக இருக்கிறார் என்ஜினியர் தமிழ்செல்வன்(ரவீந்திர விஜய்).
கயல்விழியை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் கட்டாயப்படுத்துகிறார்கள். முதலில் விருப்பம் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் தான் கொண்டாடும் தாத்தா(எம்.எஸ். பாஸ்கர்) புற்றுநோயால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
தன் எழுத்தை கொண்டாடும் தமிழ்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் கயல்விழி. அந்த நேரத்தில் கயல்விழிக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. இதையடுத்து இந்தி திணிப்பை எதிர்க்கும் கயல்விழி இந்தி கற்று தேர்வு எழுத முடிவு செய்கிறார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இயக்குநர் சுமன் குமார். பெண்கள் முன்னேற்றம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என படம் சென்றாலும் ஓவராக அறிவுரை வழங்குவது போன்று இல்லாதது ரகு தாத்தாவின் பெரிய பலம். அதே சமயம் கதையுடன் ஒன்ற நேரம் எடுக்கிறது. முதல்பாதியின் பெரும்பகுதி வள்ளுவன்பேட்டையை பற்றியே செல்கிறது. அதை பார்க்கும்போது என்ன தான் சொல்ல வருகிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. குறிப்பிட்ட கதாபாத்திரங்கள், இடத்தை சுற்றியே கதை நகரும் போது ஈர்ப்பு ஏற்படவில்லை.
நல்ல வேளை இரண்டாம் பாதியில் நம்மால் கயல்விழியின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. கயல்விழி இந்தி தேர்வு எழுத முடிவு செய்ததில் இருந்து கடைசி வரை காமெடி மற்றும் சஸ்பென்ஸை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுமன்.
சரியான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் சுமன். கயல்விழியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தி திணிப்புக்கு எதிராக கீர்த்தி சுரேஷ் பேசிய விதம் எதார்த்தமாக உள்ளதே தவிர எரிச்சல் வரவைக்கவில்லை. ரவீந்திர விஜய்யின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.
எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி நடிப்பு சிறப்பு. போதிக்காமல் படத்தை எடுத்துச் சென்றது தான் ரகு தாத்தாவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசை பலம்.