எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ளார். மொத்தம் 38 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 8-வது முறையாக நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், கலந்தாய்வு தேதிகள் மற்றும் மருத்துவ இடங்கள் ஆகியவற்றிற்கான விவரங்களை https://tnmedicalselection.net/, https://tnhealth.tn.gov.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேனேஜ்மென்ட் கோட்டாவில் 13,618 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 13,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது, பாரா மெடிக்கல் படிப்பிற்கு 68,108 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 67,038 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு 9,800, பிடிஎஸ் படிப்புக்கு 2,150 இடங்கள் உள்ளன. கடந்தாண்டை விட 150 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. நாமக்கல்லை சேர்ந்த மாணவன் ரஜினீஷ் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை அயனப்பாக்கம் மாணவர் சையது 2-வது இடம் பிடித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டு மாணவி சைலஜா 3-வது இடம் பிடித்துள்ளார்.
7.5 % இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். வெளிப்படைத் தன்மையோடு பணியாற்றி பட்டியலை வெளியிட்டுள்ளோம். முதன்மை பெற்ற 10 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.