நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06115) நாளை (புதன்கிழமை), 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.
இதேபோல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.
இந்த ரெயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.
கொடியயேற்றம் மற்றும் நிறைவு நாட்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.