டெல்லியை புரட்டி போட்ட கனமழை- பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

கோடைவெயிலில் தகித்து இருந்த டெல்லியில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று அதிகாலையிலும் அப்படி ஒரு மழை பெய்தது. மாநகரம் முழுவதும் பரவலாக கனமழையை பார்க்க முடிந்தது.

இடைவிடாத இந்த மழையால் பெரும்பாலான ரோடுகளில் முட்டளவுக்கு வெள்ளம் பாய்ந்தது. சில இடங்களில் மார்பளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றது.

குறிப்பாக மிண்டோ சாலை பாலத்தின் கீழே கார் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் சில மணி நேரத்துக்கு போக்குவரத்து போலீசார் தடை செய்தனர்.

இதைப்போல பெரோஷா சாலை, பட்டேல் சவுக் மெட்ரோ சாலை, ஐ டி ஓ, ஐ டி ஓ யமுனா சாலை, இந்திரபிரஸ்தா, முண்டுகா, ரோக்தக் ரோடு, ஆன்ந்த் பர்வ், சாஸ்திரிநகர் பகுதிகளிலும் வெள்ளம் முட்டளவு மற்றும் இடுப்பளவுக்கு சென்றது. ஐ டி ஓ பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை வெள்ளம் முற்றிலும் சூழ்ந்தது.

மழை ஓய்ந்தபிறகும் பல இடங்களில் வெள்ளம் வழிந்தோடவில்லை. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டது. அனைத்து பாதாள சாக்கடைகளும் நிரம்பி வழிந்தன. தண்ணீர் அகல நீண்டநேரம் ஆனது. பெரோ என்கிளைவ் ரவுண்டானாவில் இருந்து பீராகடி செல்லும் சாலை வெள்ளத்தால் முடங்கியதால் அவுட்டோர் ரிங் சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய சில இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள் தடுமாறி விழுந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் காப்பாற்றியதையும் காண முடிந்தது.

இதைப்போல டெல்லியில் நேற்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேங்கிய தண்ணீரை அதிகாரிகள் மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றினர்.