இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தியில், “பிரதமர் மோடியின் சமீபத்திய போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தைப் பற்றி விவாதிக்க நான் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். மேலும் உக்ரைனுக்கான அவரின் அமைதி செய்திக்காகவும், மனிதாபிமான ஆதரவுக்காகவும் அவரைப் பாராட்டினேன். இந்தோ – பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்புக்காக இணைந்து பணியாற்றுவதற்கான எங்கள் நிலைபாட்டை உறுதிப்படுத்தினோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினேன். உக்ரைனின் நிலைமை உட்பட பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். விரைவாக அமைதி திரும்புவதற்கு இந்தியாவின் முழு ஆதரவை மீண்டும் வலியுறுத்தினேன். வங்காளதேச நிலைமையை விவாதித்தோம். மேலும், அங்கு இயல்புநிலையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தையும், சிறுபான்மையினரின், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதையும் வலியுறுத்தினோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.