எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி

2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.
குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட ஒரு வீரர், சீசன் தொடங்குவதற்கு முன்பே அந்த சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில் ஆடுவதற்கும், ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்திருக்கிறது.

பொதுவாக, ஐ.பி.எல்.,இல் வெளிநாட்டு வீரர்கள், மினி ஏலத்தில் கலந்துகொண்டு, பணத்தையும் பெற்றுக்கொண்டு எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி போட்டிகளில் பங்கு பெறாமலும், பாதியில் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு விளையாடியபோது காலில் காயம், உள்ளூரில் போட்டி என்று சிலமுறை தொடரின் பாதியிலேயே விலகிச் சென்றிருக்கிறார். 2021 ஆம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா கலந்துகொண்டிருந்தார். ஆனால் அது கொரோனா சமயம் என்பதால், அதனைக் காரணம் காட்டி பாதியிலேயே சென்றுவிட்டார்.

அதுபோல, 2020-ல் நடைபெற்ற ஐ.பி.எல்.,இல் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா விளையாடியபோது அணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் சீசன் தொடங்குவதற்கு முன்பே விலகி இருந்தார். வீரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அணி நிர்வாகத்திற்கு அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், இனி பி.சி.சி.ஐ., அறிவித்திருக்கும் புதிய விதிமுறையின் படி இனிமேல் இவ்வாறு வீரர்கள் செயல்பட முடியாது. அதையும் மீறிச் செயல்பட்டால் அவர்களால் அடுத்த இரண்டு சீசன்களில் ஆடுவதற்கும் ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி 3 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் மெகா ஏலத்தில் பங்குபெறாத வெளிநாட்டு வீரர்கள் இனி மினி ஏலத்திலும் கலந்துகொள்ள முடியாது என்றும் பி.சி.சி.ஐ., அறிவித்திருக்கிறது. அவ்வகையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 2021-ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் 2023-ல் நடைபெற்ற மினி ஏலத்தில் கலந்துகொண்டார். அவரை கொல்கத்தா அணி கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. அதன்படி அவர் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்தார். ஆனால் இனிமேல் வீரர்கள் இதுபோன்று மினி ஏலத்தில் மட்டுமே பங்கேற்க முடியாது.