மகாளயபட்ச அமாவாசையும்... வழிபடும் முறையும்...

* ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு திதி செய்ய முடியவில்லை என நினைப்பவர்களுக்கு, அதாவது ஆண்டு முழுவதும் வழிபடாமல் இருந்ததை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு மகாளயபட்ச அமாவாசை மிகவும் உன்னதமான நாளாகும்.
மகாளயபட்ச அமாவாசை எப்பொழுது

* இந்த வருஷம் மகாளய அமாவாசை புதன்கிழமை உத்திர நட்சத்திரத்தோடு வருகிறது. உத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம். எனவே முறையான மகாளயபட்சத்தை கடைபிடித்தால் வெற்றி உறுதி என நம்பப்படுகிறது.

* இந்த மகாளயபட்ச காலகட்டத்தில் நம்மளுடைய பித்ருக்களை நினைவு கூர்ந்து, அவர்களை போற்றி, அவர்களுக்கு நன்றி கடன் செய்வது இந்த மகாளய அமாவாசையின் மிகப்பெரிய சிறப்பாகும்.

* இந்த மகாளயபட்ச அமாவாசை காலகட்டம் எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்க வல்லது. நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடம் மிகவும் முக்கியமானது. ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். எனவே ஆற்றங்கரை அல்லது கடற்கரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

* உங்கள் மொழி எதுவோ, அந்த மொழியில் தர்ப்பணம் செய்யலாம். உங்கள் முன்னோர்களை தமிழ் மொழி வழியில் வழிபட்டு வந்தீர்கள் என்றால், அந்த மொழியிலேயே தர்ப்பணம் கொடுக்கலாம்.

* பித்ருக்களுக்கு தர்ப்பணம் எந்த காலகட்டத்தோடு செய்ய வேண்டும் என்றால், காலை நேரம் சூரியன் உதயமாகிற காலகட்டம் ரொம்ப விசேஷம். இந்த மகாளய அமாவாசை இந்த வருஷம் புதன்கிழமை உத்திர நட்சத்திரத்தோடு வருகிறது. உத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம். அதிகாலையில் தர்ப்பணம் செய்து, சூரியனுக்கு நன்றி செலுத்திட வேண்டும்

அதன்பிறகு கோவிலுக்கு சென்று அகத்திக்கீரையும், இரண்டு மஞ்சள், வாழைப்பழம் மற்றும் ஒரு அச்சு வெல்லமும் கொடுத்து பூஜை செய்துக்கொள்ளலாம்.

* வீட்டுக்கு வந்து பித்துருக்களுடைய படம் வைத்து அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, அவர்களுக்கு பிடித்த பொருட்களை எல்லாம் வைத்து தீபாராதனை காண்பித்து, முறையாக வணங்கி முதல் உணவை காக்கைக்கும், இரண்டாவது உணவை அந்த ஊரில் ஏழ்மை நிலையில் இருப்பவருக்கும் கொடுத்துவிட்டு, பின் குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.

* இந்த மகாளயபட்ச அமாவாசை அன்று நமது பித்ருக்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதை சரியாக செய்து இறைவனையும் வழிபாடு செய்து முன்னோர்களின் அருளை பெற்றுக்கொள்ளுங்கள்.