ஏழைகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்- தேர்தல் அறிக்கையில் அமித்ஷா அறிவிப்பு

ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல், இம்மாதம் 13 மற்றும் 20-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது.

இதையொட்டி, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அங்கு சென்றார். தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர், அமித்ஷா பேசியதாவது:-

ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தலா ரூ.2,500 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் 6 ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களும், தலா ரூ.21 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்படும். ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டம்வரை இலவச கல்வி வழங்கப்படும்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்வகையில், ‘கோகோ-தீதி’ திட்டத்தின்கீழ், மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும். இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டுகள்வரை மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

பெண்கள் பெயரில் ரூ.50 லட்சம்வரை மதிப்புள்ள சொத்துகளை ரூ.1 முத்திரை கட்டணத்தில் பதிவு செய்யும் திட்டத்தை பா.ஜனதா அமல்படுத்தி வந்தது. அதை ஹேமந்த் சோரன் அரசு ரத்து செய்து விட்டது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், அத்திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் போடப்படும். ஒவ்வொரு மாவட்டத்தையும் ராஞ்சியுடன் இணைக்கும்வகையில் ரெயில் வசதி விரிவுபடுத்தப்படும்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், ஜார்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதில் பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும்.

பொது சிவில் சட்டம் பழங்குடியினரின் உரிமைகளையும், கலாசாரத்தையும் பாதிக்கும் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரனும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினரும் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது முற்றிலும் அடிப்படையற்றது. ஏனென்றால், பழங்குடியினர் அச்சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டார்கள்.

நாங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினாலும், பழங்குடியினரின் உரிமைகள், அவர்களுக்கான சட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், ஜார்கண்ட் மாநிலத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில், 2 லட்சத்து 87 ஆயிரம், அரசு வேலைவாய்ப்புகள் ஆகும்.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள் ஆகியவை அமைவதற்காக வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்காக இடம்பெயர்ந்தோர் ஆணையம் அமைக்கப்படும்.

ஹேமந்த் சோரன் அரசு, ஊடுருவல்களுக்கு துணை போகிறது. ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட் மாநிலத்தில் நிலத்துக்கும், பெண்ணுக்கும், உணவுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மாநிலத்தின் மக்கள்தொகையே மாறி வருகிறது.

எனவே, ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்த நிலம் பறிமுதல் ெசய்யப்படும். இதற்காக கடுமையான சட்டம் ெகாண்டுவரப்படும். சட்டவிேராதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவார்கள். வங்காளதேச ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவோம்.

இந்தியாவிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக ஜார்கண்ட் உருவெடுத்துள்ளது. ஹேமந்த் சோரன் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 29 சதவீதம், கற்பழிப்பு வழக்குகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளன.

2027-ம் ஆண்டுக்குள், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆள் கடத்தலுக்கு முடிவு கட்டப்படும்.

போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது பற்றி சி.பி.ஐ. மற்றும் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் சிறையில் தள்ளப்படுவார்கள். ஜார்கண்ட் மாநிலம், சூழலியல் சுற்றுலா மையமாக உருவாக்கப்படும். 10 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் 70 வயதை கடந்தவர்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு, ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.