அரசு எச்சரிக்கை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள் ‘பேக்கிங்' செய்யக்கூடாது

சென்னையில் பெரும்பாலான சாலையோர-தள்ளுவண்டி உணவகங்களில் உணவுகள் பிளாஸ்டிக் பேப்பரில் தான் வழங்கப்படுகின்றன. ஓட்டல்களிலும் பார்சல் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெறுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சென்னையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணைய சட்டம் 2006-ன்படி, அனுமதி அளிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு உணவுகளை பொதிந்து கொடுக்கவோ, பேக்கிங் செய்து கொடுக்கவோ கூடாது. அந்தவகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன.

எனவே மக்காத மூலப்பொருட்கள் கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை பேக்கிங் செய்து கொடுக்க கூடாது. உணவு பாதுகாப்பு தரத்துக்குட்பட்ட பொருட்கள் மட்டுமே உணவுகளை ‘பேக்கிங்’ செய்ய உகந்தது ஆகும்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வின்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதல் தடவை ரூ.2 ஆயிரமும், 2-வது தடவை என்றால் ரூ.5 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் பதிவு சான்றிதழை ரத்து செய்வதுடன் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். தடையை மீறிய நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.