ஐ.பி.எல். கிரிக்கெட்: ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம்

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந்தேதி முதல் மே 25-ந்தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 46 வீரர்கள் தக்க வைத்தன. கழற்றிவிடப்பட்ட வீரர்கள் அனைவரும் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் 210 வெளிநாட்டவர் உள்பட 577 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் குறிப்பிட்ட வீரர்களை குறி வைத்து பல்வேறு யுக்திகளுடன் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் முதல் வீரராக இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்கின் பெயர் வாசிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி கேப்பிட்டல்சும் அவரை வாங்க ஆர்வம் காட்டின. அவரது விலை ரூ.7½ கோடி வந்ததும் சென்னை பின்வாங்கியது. இதன் பின்னர் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மல்லுக்கட்டின. ஐதராபாத் ரூ.15¾ கோடிக்கு கேட்ட போது, பஞ்சாப் கிங்ஸ் தடாலடியாக ஆர்.டி.எம். கார்டை தூக்கி காட்டியது. தங்களது அணிக்காக முந்தைய சீசனில் ஆடிய வீரர்களை தட்டிதூக்குவதற்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை தான் ‘ரைட் டூ மேட்ச்’ எனப்படும் ஆர்.டி.எம். கார்டு. இதைத் தொடர்ந்து புதிய விதிமுறைப்படி, நீங்கள் எவ்வளவு தொகை வரை அவரை எடுக்க விரும்புகிறீர்கள் என்று ஐதராபாத் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது. அவர்கள் ரூ.18 கோடி என்றனர். அந்த தொகைக்கு உடன்பட்டால் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தலாம் என்று பஞ்சாப் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சரி என்று கூறி ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.18 கோடிக்கு அர்ஷ்தீப்சிங்கை ஏலத்தில் எடுத்தனர்.

முந்தைய ஆண்டு இதே பஞ்சாப்புக்கு ஆடிய போது ரூ.4 கோடி ஊதியம் பெற்ற அர்ஷ்தீப்சிங் இப்போது அதை விட 4 மடங்கு சம்பாதிக்கப் போகிறார்.

ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்களை எடுக்கவே அணி நிர்வாகிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்திய மிடில் வரிசை பேட்ஸ்ேமனான ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆனால் அவரை அந்த நிர்வாகம் தக்க வைக்கவில்லை. தனது உண்மையான மதிப்பை அறிய வேண்டும் என்று விரும்பிய ஸ்ரேயாஸ் அய்யர் தன்னை ஏலப்பட்டியலில் இணைத்துக் கொண்டார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

ஏலத்தில்அவரது பெயர் வாசிக்கப்பட்ட போது அவரை வாங்க பஞ்சாப் கிங்சும், டெல்லி கேப்பிட்டல்சும் தீவிரம் காட்டின. ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் கேப்டன் தேவைப்படுவதால் அவருக்காக கோடிகளை அள்ளி வீசின. ரூ.10 கோடி, ரூ.15 கோடி, ரூ.20 கோடி என்று விலை எகிறிக் கொண்டே போனது. ஆனாலும் இரு அணிகளும் விடுவதாக இல்லை. கடைசியில் ரூ.26¾ கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அவரை தட்டிச் சென்றது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு விைல போன வீரர் இவர் தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24¾ கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது. ஒரு வேளை கொல்கத்தா அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் தக்க வைக்கப்பட்டிருந்தால் அவரது தொகை ரூ.18 கோடிக்கு மேல் தாண்டி இருக்காது. ஏலத்திற்கு வந்ததால் அவரது காட்டில் இனி பணமழை தான்.

ஆனால் சிறிது நேரத்தில் அவரது சாதனையை இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தகர்த்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்டும் இந்த முறை அணியை விட்டு வெளியேறி ஏலத்திற்கு வந்தார். அவருக்கும் ஏலத்தில் கடும் கிராக்கி காணப்பட்டது. முதலில் லக்னோவும், பெங்களூருவும் அவரது விலையை உயர்த்திய வண்ணம் இருந்தன. ரூ.15 கோடி நெருங்கிய போது ஐதராபாத் சன்ரைசர்ஸ் கோதாவில் குதித்தது. அதன் பிறகு ஐதராபாத், லக்னோ இடையே நேரடி போட்டி நிலவியது. ரூ.20¾ கோடியை தொட்ட போது ஐதராபாத் ஜகா வாங்கியது. அந்த சமயத்தில் டெல்லி அணி ஆர்.டி.எம். கார்டை காட்டி எடுக்க முயற்சித்தது. உடனே லக்னோ அணி இறுதியாக அவருக்கு ரூ.27 கோடியை நிர்ணயிப்பதாக கூறியது. ஆனால் இவ்வளவு தொகைக்கு ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்த விரும்பவில்லை என்று டெல்லி கூறி விட்டது. இதையடுத்து ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யரிடம் இருந்து வெறும் அரைமணி நேரத்தில் தட்டிப்பறித்தார். லக்னோ சூப்பர் ெஜயன்ட்ஸ் அணிக்கு கேப்டன் இல்லாததால் பண்ட் கேப்டனாவது உறுதியாகி விட்டது.

ஏலத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு இந்தியர் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் தான். 11 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு. ஆனாலும் ஏலத்தில் அவரது தொகை றெக்கை கட்டி பறந்தது. ரூ.2 கோடியில் தொடங்கிய அவரது விலையை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ரூ.20 கோடிக்கு நகர்த்தி விட்டன. ரூ.23½ கோடி வரை பெங்களூரு முட்டிப்பார்த்தது. அதைத் தொடர்ந்து ரூ.23¾ கோடி என கொல்கத்தா சொன்னதும், பெங்களூரு தரப்பு மவுனமானது. இதையடுத்து ரூ.23¾ கோடிக்கு அவரை கொல்கத்தா சொந்தமாக்கியது. முன்பு ரூ.8 கோடிக்கு அவரை வைத்திருந்த இதே கொல்கத்தா இப்போது பெருந்தொகை கொடுத்து வாங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதே போல் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (ரூ.18 கோடி, பஞ்சாப் அணி), லோகேஷ் ராகுல் (ரூ.14 கோடி, டெல்லி), வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (ரூ.12¼ கோடி, குஜராத்), இஷான் கிஷன் (ரூ.11¼ கோடி, ஐதராபாத்), ஜிதேஷ் ஷர்மா (ரூ.11 கோடி, பெங்களூரு), தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (ரூ.10¾ கோடி, டெல்லி) ஆகியோரும் கணிசமான தொகைக்கு விலை போனார்கள்.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான ஜோஸ் பட்லரை ரூ.15¾ கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் எடுத்தது. ராஜஸ்தான், லக்னோ அணிகளும் அவரை இழுக்க முனைப்பு காட்டிய நிலையில் இறுதியில் அவரை குஜராத் வசப்படுத்தியது.

கடந்த ஆண்டு ஏலத்தில் வரலாறு படைத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் விலை பாதியாக குறைந்து போனது. அவரை ரூ.11¾ கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் (ரூ.12½ கோடி, மும்பை இந்தியன்ஸ்), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (ரூ.12½ கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ்), ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (ரூ.12½ கோடி, பெங்களூரு), சர்வதேச 20 ஓவர் போட்டியில் 3 சதங்கள் அடித்தவரான இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பில் சால்ட் (ரூ.11½ கோடி, பெங்களூரு) ஆகியோருக்கும் ஏலத்தில் மவுசு இருந்தது.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழகத்தை சேர்ந்த மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ரூ.9¾ கோடிக்கு வாங்கியது. இதே போல் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு வசப்படுத்தியது. ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), டிவான் கான்வே (ரூ.6¼ கோடி), கலீல் அகமது (ரூ.4.80 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.3.40 கோடி) ஆகியோரும் சென்னை அணியில் ஐக்கியமாகிறார்கள்.

முதல்முறையாக 3 வீரர்கள் ரூ.23 கோடிக்கு மேல் விலைபோய் சாதனை படைத்த இந்த ஐ.பி.எல். ஏலம் 2-வது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெறும்.