சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை தேடித்தேடி சேகரித்து, நூல்களாக மாற்றியுள்ளார். அவரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் அய்யர் பிறந்தநாளில் கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
உறுப்பினர் கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
இந்த நேரத்தில் அவையில் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை கேட்டுக்கொண்டிருந்தார். சட்டென்று எழுந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உறுப்பினர் கே.பி.முனுசாமி இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சரும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். டாக்டர் உ.வே.சாமிநாதர் அய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.
முதல்-அமைச்சரும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.