பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, பெங்களூரில் நேற்று காலமானார்.
சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா என அழைக்கப்படும் எஸ்.எம். கிருஷ்ணா, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று அதிகாலை 2:45 மணிக்கு காலமானார்.
கிருஷ்ணாவின் உடல், அவரது சொந்த சட்டசபை தொகுதியான கர்நாடகாவின் மட்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று முதல் 12ம் தேதி வரை கர்நாடக அரசு துக்கம் அனுஷ்டிக்கிறது. அவரது இறுதி சடங்கு, மாண்டியா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடக்கிறது.
எஸ்.எம்கிருஷ்ணா-பிரேமா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் மாளவிகா சித்தார்த். மருமகன் சித்தார்த் காபி டே உரிமையாளர். பெரிய தொழில் அதிபராக இருந்த அவர் கடந்த 2019-ம் ஆண்டு மங்களூரு அருகே உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் எஸ்.எம்.கிருஷ்ணா பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது இன்னொரு மகள் சம்பாவி கிருஷ்ணா. அவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார்.
கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் இரங்கல் குறிப்பில், ‘குறிப்பிடத்தக்க தலைவரான கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்டார்.
அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அயராது உழைத்தார்.
‘கர்நாடக முதல்வராக இருந்தபோது உட்கட்டமைப்பை வசதியை மேம்படுத்தினார்’ என, குறிப்பிட்டுள்ளார்.