வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... நாளை முதல் எங்கெல்லாம் மழை?

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அது உருவாகவில்லை.

இன்று (திங்கட்கிழமை) தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும் வலுவடைய இருக்கிறது.

இந்த நிகழ்வு காரணமாக 5-வது சுற்று மழை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இது தமிழக கடற்கரைக்கு அருகில் நின்று, மெதுவாக நகர்ந்து மழையை கொடுக்க இருக்கிறது.

சென்னை முதல் கடலூர் வரையிலான வடகடலோரப் பகுதிகளில் மிக கனமழை (ஆரஞ்சு எச்சரிக்கை) வரை பதிவாக வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள இடங்களின் விவரம் வருமாறு:-

நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும்.

19-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மிக கனமழை பதிவாகக் கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கன மழை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலும், தெற்கு, தென்மேற்கு, அதனையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.