அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என பூசணி விதைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த சிறிய விதைகள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால், அது உங்கள் உடலில் பல நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உடல் எடையை குறைக்க அல்லது உங்கள் இதயம் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த விரும்பினால் இந்த சிறிய சூப்பர்ஃபுட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பூசணி விதைகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
உடலுக்கு ஆற்றலை அளிக்கும்:
பூசணி விதைகளில் ப்ரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய மினரல்ஸ் உள்ளன. இவை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும். பூசணி விதைகளை காலை உணவின்போதோ அல்லது ஸ்னாக்ஸாகவோ சாப்பிடுவதால் சோர்வு நீங்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்ஸ் , மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் இந்த சிறிய விதைகளில் காணப்படுகின்றன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தவிர ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
பூசணி விதையில் ஜிங்க் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு மணடலத்தை வலுவாக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. தினமும் பூசணி விதைகளை எடுத்துக் கொள்வதன் மூலம், சளி மற்றும் பிற தொற்றுகள் நம்மை அண்டாமல் தவிர்க்கலாம்.
செரிமான அமைப்பை பலமாக்கும்:
பூசணி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவுகிறது. எனவே, பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி வயிறு சுத்தமாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்:
பூசணி விதைகள் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவற்றில் இன்சுலின் அளவை மேம்படுத்தும் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் கலவைகள் உள்ளன.
சருமம் & கூந்தல் ஆரோக்கியம்:
இந்த விதைகளில் உள்ள வைட்டமின் ஈ, ஜிங்க் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நம் சருமத்தை பளபளப்பாகவும், கூந்தலை வலுவாகவும் வைக்க உதவுகின்றன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர முடி உதிர்தல் பிரச்சனையும் குறையும்.
தூக்கம் மேம்படும்:
பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ ஆசிட் உள்ளதால், மெலடோனின் என்ற ஹார்மோனை அதிகரிக்கச் செய்கிறது. இந்த ஹார்மோன் நல்ல தூக்கத்திற்கு அவசியம். உங்களுக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், பூசணி விதைகளை தினமும் சாப்பிடலாம்.
எலும்புகளை வலுவாக்கும்:
பூசணி விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் அடங்கி உள்ளது. இவை எலும்புகளை வலுவாக வைக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்கள் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகின்றன.
உடல் எடையை குறைக்க உதவும்:
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், பூசணி விதைகள் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம். இவை பசியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் அதிகபடியாக சாப்பிடும் பழக்கத்தை தடுக்க உதவுகின்றன.
சரியான முறையில் சாப்பிடுவது எப்படி?
பூசணி விதைகளை லேசாக வறுத்து சாப்பிடலாம்.
பூசணி விதைகளை காலையில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஸ்மூத்தியில் சேர்க்கலாம்.
சாலட்டில் டாப்பிங்காக சேர்க்கலாம்.
யோகர்ட் அல்லது ஓட்ஸுடன் காலை உணவாக சாப்பிடலாம்.
பூசணி விதைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.