இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தரிசன சர்ச்சை…. அறநிலையத் துறைக்கு அறிக்கை சமர்பிப்பு…
ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களையும் தொகுத்து, திவ்ய பாசுரங்கள் என்ற தலைப்பில் இளையராஜா இசையமைத்து உள்ளார்.
மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்த பாடல்களின் வெளியீட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இளையராஜா வந்திருந்தார்.
இதை கேள்விப்பட்டு பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர்.
கோவிலுக்கு வந்த இளையராஜா, திரிதண்டி மடாதிபதி நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் முன்னிலையில், மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து யானை மற்றும் வெண்குடை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜீயர்களும், இளையராஜாவும் ஆண்டாள் கோவிலுக்கு சென்றனர். ஆண்டாள் சன்னதி முன்பாக பாடல்களை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து, கோவில் முன்பு அரங்கேற்றம் இரவு 10 மணி வரை நடந்தது. இளையராஜா அங்கேயே இருந்து பார்வையிட்டார்.
முன்னதாக கோவில் அர்த்த மண்டபத்துக்குள் ஜீயர்களுடன் இளையராஜா சென்றதாகவும், அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வெளியாகி சர்ச்சையானது.
இளையராஜாவை தடுத்தது ஏற்க முடியாதது என்றும், அவருக்கு விதிகளை மீறி வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துக்கள் பரவின. இதனால் பரபரப்பானது.
இதுகுறித்து கோவிலில் விசாரித்தபோது, “கருவறைக்குள் ஆகம விதிப்படி அர்ச்சகர்கள், ஜீயர்கள் மட்டுமே செல்ல முடியும். அதன்படி கருவறைக்குள் ஜீயர்கள் சென்றனர். சிறப்பு தரிசன நுழைவு வாயில் அருகில் இளையராஜாவுக்கு மரியாதை செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியதாவது:-
ஆண்டாள் தாயார் மீது இசையமைப்பாளர் இளையராஜா அதிக பற்று உள்ளவர். ஆண்டாளை போற்றும் விதமாக திவ்ய பாசுரங்களுக்கு இசை அமைத்து உள்ளார். இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த பாடல்கள் வெளியீட்டுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்த இளையராஜாவுக்கு கோவிலில் எந்த ஒரு அவமரியாதையும் ஏற்படவில்லை. அவர் மனதிருப்தியோடு சாமி தரிசனம் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சென்றார். கருவறைக்குள் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும், அவருக்கு அவமரியாதை என்றும் தகவல்கள் திரித்து பரப்பப்பட்டுள்ளன. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. கண்டனத்துக்குரிய செயல்களை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜீயர் கூறினார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டாள் கோவில் செயல் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அந்த அறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் விருதுநகர் கலெக்டருக்கு மண்டல கமிஷனர் செல்லத்துரை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டாள் திருக்கோவிலானது, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(Ill)-ன் கீழ் உள்ளதாகும். இந்த தலமானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப்பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் கருவறையிலும், அதனை அடுத்த அர்த்தமண்டபத்தில் உற்சவர்களும் எழுந்தருளி உள்ளனர். இக்கோவில் மரபுபடியும், பழக்கவழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை கோவிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்களை அனுமதிக்கும் வழக்கம் இல்லை.
எனவே இசையமைப்பாளர் இளையராஜா, திரிதண்டி நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் தரிசனத்துக்காக வந்தபோது, அர்த்த மண்டப வாசல்படி ஏறியபோது உடன் இருந்த ஜீயர் மற்றும் கோவில் ஊழியர், அர்த்த மண்டபம் முன்பிருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறினார்கள். அதற்கு இளையராஜாவும் ஒப்புக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்தார். திரிதண்டி நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்தார் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.