ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை, தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கிவிட்டார். பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி படம் இருந்த, லோகோவை மாற்றினார்.
டுவிட்டர் என்ற பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். ஆனால் மக்கள் மத்தியில் இந்த பெயர் எடுபடவில்லை. டுவிட்டர் என்று பயனர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். சிஸ்டத்துக்கு இனியும் அவை தேவையில்லை. ஹேஷ்டேக் அசிங்கமாகத் தெரிகின்றன. இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.