பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் குவைத் சென்றார்.
43 ஆண்டுகளுக்குப்பின் குவைத்துக்கு சென்றுள்ள இந்திய பிரதமரான மோடிக்கு, தலைநகர் குவைத் சிட்டியில் அந்த நாட்டு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் அங்கு வாழும் இந்தியர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து பிரதமரை வரவேற்றனர்.
பின்னர் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். குறிப்பாக அங்கு வசித்து வரும் இந்திய தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து ஷேக் சாத் அல்-அப்துல்லா உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்தியர்களை சந்தித்து பேசும் ‘ஹலா மோடி’ என்ற சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு திரண்டிருந்த ஏராளமான இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
முன்னதாக ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபி மொழியில் வெளியிட்ட அப்துல்லா அல் பரோன் மற்றும் அப்துல் லத்தீப் அல் நெசப் ஆகிய பிரதமர் மோடி இருவரையும் சந்தித்தார்.
தனது பயணத்தின் 2-வது நாளான நேற்றும் குவைத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதில் முக்கியமாக பாயன் அரண்மனையில் குவைத் மன்னர் ஷேக் மிஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாைவ சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தகவல் தொழில்நுட்பம், மருந்து பொருட்கள், பின்டெக், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.
அதில் அவர், ‘குவைத் மன்னர் ஷேக் மிஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நமது நாடுகளுக்கிடையே உள்ள நெருங்கிய உறவுகளுக்கு ஏற்ப, நமது ஒத்துழைப்பை ஒரு வியூகமாக உயர்த்தியுள்ளோம். வரும் காலங்களில் நமது நட்பு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக அரண்மனையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைப்போல குவைத் பிரதமர் அகமது அப்துல்லா அல்-அகமது அல்-சபாவுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உயர் மட்டக்குழுவினருடன் இந்த சந்திப்பை நடத்திய இரு பிரதமர்களும், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விவாதித்தனர்.
மேலும் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமது அல்-முபாரக் அல்-சபாவையும் சந்தித்து பேசினார். பிரதமர் மோடிக்கு அவர் விருந்தும் அளித்து கவுரவித்தார்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து இந்தியா-குவைத் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில் முக்கியமாக பாதுகாப்புத்துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது. இதன் மூலம் ராணுவ தொழிற்சாலைகள், தளவாடங்கள் வினியோகம், கூட்டு ஒத்திகை, பயிற்சி, வீரர்கள்-நிபுணர்கள் பரிமாற்றம், ஆய்வு மற்றும் மேம்பாட்டில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும்.
இதைத்தவிர விளையாட்டு, கலாசாரம் மற்றும் சோலார் எரிசக்தி துறையில் தலா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
குவைத் தலைவர்களுடனான சந்திப்பின் போது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் இணைந்து செயல்படுவதை தீவிரப்படுத்த இந்தியா ஆர்வம் காட்டியது.
முன்னதாக பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘முபாரக் அல்-கபீர் ஆர்டர்’ விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை மன்னர் ஷேக் மிஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா வழங்கி கவுரவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளுக்கு குவைத் மக்களின் நன்றியின் சின்னமாக இந்த விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்டு பேசிய பிரதமர் ேமாடி, ‘இந்த மதிப்பு மிக்க விருதானது, இந்தியா, குவைத் இடையேயான நீண்டகால நட்புறவுக்கான அர்ப்பணிப்பின் அடையாளமாக உள்ளது. இந்த உறவுகளை மேலும் அதிக உயரத்துக்கு எடுத்துச்செல்ல உறுதிபூண்டுள்ளேன்’ என தெரிவித்தார்.
இந்த உயரிய விருதை இந்திய மக்களுக்கும், இந்தியா-குவைத் இடையேயான வலுவான நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாக பின்னர் தனது எக்ஸ் தளத்திலும் குறிப்பிட்டு இருந்தார்.விருதை வழங்கி குவைத் மன்னர் பேசும்போது, ‘இது எங்களின் உயரிய விருது. அதை பெறுவதற்கு நீங்கள் தகுதியானவர்’ என பாராட்டினார்.
பிரதமர் மோடி பெற்ற 20-வது சர்வதேச விருது இதுவாகும்.
நட்பின் அடையாளமாக வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உள்ளிட்ேடாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.