ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’

ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி மகுடம் சூடியது.

முதலாவது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிசுற்றுக்கு முன்னேறின. இவர்களில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் நேற்று அரங்கேறியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனை கொங்கடி திரிஷா நிலைத்து நின்று ஆட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. தமிழக வீராங்கனை ஜி.கமலினி (5 ரன்), சானிகா சால்க் (0), கேப்டன் நிக்கி பிரசாத் (12 ரன்) ஏமாற்றம் அளித்தனர். சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவிய திரிஷா 52 ரன்களும் (47 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மிதிலா வினோத் 17 ரன்களும் திரட்டினர்.

20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது. எக்ஸ்டிரா வகையில் 8 வைடு உள்பட 10 ரன் கிடைத்தது. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பர்ஜானா ஈஸ்மின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 118 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச பேட்டர்கள் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தனர். பஹோமிதா சோயா (18 ரன்), விக்கெட் கீப்பர் ஜூவாரியா பெர்டோஸ் (22 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அந்த அணி 18.3 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டும், பாருனிகா சிசோடியா, சோனம் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

கடந்த 8-ந்தேதி துபாயில் நிறைவடைந்த ஆண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு பெண்கள் அணி பதிலடி கொடுத்துள்ளது. திரிஷா ஆட்டநாயகி விருதை பெற்றார்.

இந்திய பெண்கள் அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் கூறுகையில், ‘நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைத்தோம். ஆனாலும் 117 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் தான். எங்களிடம் உள்ள பந்து வீச்சாளர்களை கொண்டு சிறப்பாக பந்து வீசி எதிரணியை மடக்கி விட முடியும் என்று நம்பினோம். அதன்படியே பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் எங்களது வீராங்கனைகள் அற்புதமாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்தனர்’ என்றார்.

இந்திய பெண்கள் அணி அடுத்த மாதம் 18-ந்தேதி இதே மைதானத்தில் தொடங்கும் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளது.