5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்.... அன்பில்மகேஷ் விளக்கம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, தமிழக அரசு தொடங்கிய பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழகத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசு பள்ளிகளை தவிர பிற பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்த வகையிலும் குழப்பமடைய தேவையில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.